ஈழத்தமிழர்களுக்கு இந்தியக்குடியுரிமை – உலகத்தமிழர்கள் பங்கேற்ற கருத்தரங்கு

“தமிழக வாழ் இலங்கைத் தமிழ் ஏதிலியர் மன்றம்” எனும் அமைப்பு தமிழகம் எங்குமுள்ள மறுவாழ்வு முகாமிலுள்ள ஏதிலியர்களை ஒருங்கிணைத்துக் காத்திரமான பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

இதன் ஒருங்கிணைப்பாளராகச் சிவகங்கையைச் சார்ந்த மோகன்தாஸ் பணியாற்றி வருகிறார்.

மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்கள், முகாமிற்கு வெளியிலுள்ளவர்கள் என அனைவரது சிக்கல்களையும் இயன்ற அளவு போக்குவதற்குப் பல்வேறு ஆக்க வழியிலான உதவிகளை அவர் தொய்வின்றிச் செய்து வருகிறார்.

ஏதிலியர் மன்றத்தின் சார்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தியக்குடியுரிமை பெற வேண்டி, இதுவரை இணையவழியில் 99 கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். இதில் தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் சனநாயகச் செயல்பாட்டாளர்கள் ஆகியோரைப் பங்கேற்கச் செய்து, ஏதிலியரின் சிக்கல்களைப் பொதுவெளியில் பேசுபொருளாக மாற்றியுள்ளார்.

இலண்டனிலுள்ள இராசன் காந்தி இவரது முயற்சிகளுக்கு ஆதார சக்தியாக விளங்குகிறார்.

மன்றத்தின் சார்பாக நூறாவது இணையவழி கருத்தரங்கு நேற்று (07/03/2022) அன்று நடைபெற்றது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இணைய வழிக் கூடுகையில், அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜெர்மனி, இலங்கை எனப் பல்வேறு நாடுகளிலிருந்து ஆளுமைகள் பலர் பங்கேற்று, இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினர். தமிழகத்திலிருந்தும் பல்வேறு முன்னோடிச் செயல்பாட்டாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

ஏதிலியர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மோகன்தாசின் அறிமுக மற்றும் வரவேற்புரைக்குப் பிறகு,
ஜெர்மனியிலிருந்து பங்கேற்ற தோழியர் சாந்தி, புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் எவ்வளவு தூரம் துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் இடையே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், வெளிப்பார்வைக்குத் தெரியாத எண்ணற்ற அவமானங்களை அவர்கள் சந்திக்கின்றார்கள் என்பதையும் விரிவாகச் சமகால அனுபவங்களோடு எடுத்துரைத்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து பால.விக்னேசுவரன், முகாம் தமிழர்கள் / புலம்பெயர் தமிழர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் தேவை குறித்து வலியுறுத்தினார். தவிரவும், புலம்பெயர் தமிழர்கள் ஒரு குழுவாக இணைந்து தமிழக ஏதிலியர்களுக்கு உதவும் வண்ணம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

எஸ்டிபிஐ கட்சியின் தமிழகத் தலைவர் நெல்லை முபாரக், மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களது தேவைகள் பற்றி அரசுக்குத் தெரிவிக்கத் தனியானதோர் அமைப்பின் தேவை குறித்தும், சிறப்பு முகாமை மூட வேண்டியதன் தேவை குறித்தும், முகாமிலுள்ளவர்களுக்கு இப்பொழுதுள்ள
குறுகிய வீடுகளுக்கு மாற்றாக விரிவான தொகுப்பு வீடுகளை அரசு கட்டித்தர வேண்டியது குறித்தும் ஏதிலியர்கள் பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட, ஒன்றிய அரசுக்கு அரசியல் அழுத்தம் தரப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் உரையாற்றினார். அத்துடன் இலங்கையிலுள்ள சிறுபான்மையினரும் தமிழர்களும் தற்பொழுது இணைந்து செயல்பட வேண்டியது வரலாற்றுத் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை சார்பாக கண.குறிஞ்சி உரையாற்றிய பொழுது, உலகங்கும் உள்ள ஏதிலியர்கள் நிலை குறித்தும், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவதில் ஒன்றிய அரசு காட்டிவரும் ஒவ்வாமை குறித்தும், 1951 / 1967 ஆண்டு ஏதிலியர் குறித்த பன்னாட்டு ஒப்பந்தங்கள் குறித்தும், இந்தியக் குடியுரிமைச் சட்டங்கள் 1955 / 1987 ஆகியன குறித்தும், தமிழ் ஏதிலியரின் குடியுரிமை குறித்த மோடி அரசின் சனநாயகத்திற்கு எதிரான அணுகுமுறை குறித்தும் எடுத்துரைத்ததோடு, திபெத் ஏதிலியர்களுக்கும் தமிழ் ஏதிலியருக்கும் ஞாயமற்றுக் காண்பிக்கப்படும் மாறுபாடு குறித்தும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினேன். இறுதியாக ஒன்றிய அரசு / தமிழக அரசு / தமிழக அரசியல் கட்சிகள் குடியுரிமை குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

அடுத்து கருத்துரை வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், கடந்த காலத்தில் ஏதிலிகள் இருந்த நிலையையும், ஆட்சி மாறியபின் அவர்களது நிலையையும் ஒப்பிட்டுக் காட்டியதோடு, முகாமிலுள்ள தமிழ் ஏதிலியர்களுக்காகத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டு எடுத்துரைத்தார். ஏதிலியர்களுக்குக் குடியுரிமை வழங்கும் அதிகாரம், ஒன்றிய அரசிடம் இருப்பதையும், அதேசமயம் தமிழகத்தின் மீதான ஒன்றிய அரசின் அக்கரையின்மையையும் அவர் சுட்டிக் காட்டினார். அதே போல், தனியார் நிறுவனங்களில் ஏதிலியர்களுக்குக் குறிப்பிட்ட அளவு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனவும் குறிப்பிட்டார். தற்பொழுதுள்ள முகாம் பொறுப்பு அதிகாரியின் செயல்பாடு பலராலும் பாராட்டத் தக்கதாக உள்ளதால், முகாமின் குறைபாடுகள் விரைவில் சீர்செய்யப்படும் என்பதையும் தெளிவு படுத்தினார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, சார்க் நாடுகளில் உள்ளது போன்ற சட்டத்தைக் கூட ஏதிலியர் குறித்து இந்தியா இயற்றவில்லை எனவும், அரசியல் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் காரணத்தால், இங்குள்ளவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் முகாம்களைச் சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்; கியூ பிரிவின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் எனவும், சிறப்பு முகாம்களைக் கலைக்க வேண்டும் எனவும், முகாம்களில் ஒன்றிய அரசின் தலையீடு ஏற்கத்தக்கதல்ல எனவும் விரிவாக எடுத்துரைத்தார். தவிரவும், கடந்த ஆட்சியில் நேப்பாளம், பூடான் போன்ற நாடுகளில் இருப்பவர்கள் கூட தமிழக அரசின் பணிகளுக்குச் சேரலாம் என அரசாணை வெளியிடப்பட்டது போல, தற்பொழுது இலங்கைத் தமிழர்களுக்கும் அரசுப்பணியில் சேர அனுமதி வழங்குவது குறித்துத் தமிழக அரசு பரிசீலிக்கலாம் எனப் பரிந்துரைத்தார்.

தமிழக அரசு நியமித்த இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கோவி.லெனின் உரையாற்றும் பொழுது, ஆலோசனைக் குழுவின் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக முகாமில் உள்ளவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்றைய அரசால் வழங்கப் படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார். குடியுரிமை குறித்து ஆய்வு செய்யத் துணைக்குழு அமைக்கப் பட்டுள்ளது என்ற நற்செய்தியையும் அவர் தெரிவித்தார். முகாமிலுள்ள வீடுகளின் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது ; உரிய அளவு கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது என்பதையும் அறிவித்தார். ஏதிலியர் சிக்கல்களில் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கூடுதல் கரிசனத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழீழத்தாயகத்தைச் சார்ந்த திருமதி அனந்தி சசிதரன், இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை முறையைக் கொண்டுவர வேண்டும் எனவும், மற்ற நாடுகளில் இலங்கைத் தமிழர்களுக்குத் தடையின்றிக் குடியுரிமை வழங்கப்படுவது போல, இந்தியாவிலும் வழங்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னைப் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், இலங்கை ஏதிலியர்களைச் “சட்டவிரோதக் குடியேறிகள்” எனக் குறிப்பிடுவது ஏற்கத்தக்கது அல்ல எனவும், இலங்கை ஏதிலியர்கள் குறித்துப் பல்வேறு வகைகளில் அரசு பதிவிட்டு வருவதால், அதை அடிப்படையாகக் கொண்டு, தமிழக அரசே அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசின் அந்தச் சான்றிதழை இந்தியக் குடியுரிமை கேட்பதற்கான சட்ட ஆதரமாகக் கொள்ளலாம் எனவும் சுட்டிக் காட்டினார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இங்குள்ள ஏதிலிகள் இலங்கை வந்து வாழ்வதற்கான சூழல் இப்பொழுது அங்கு இல்லை எனவும் எடுத்துக்காட்டுகளுடன் தெளிவு படுத்தினார். மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் விடுதலை பெற்றுத்தர ஒன்றிய அரசுக்குத் தமிழகம், அரசியல் அழுத்தம் தரவேண்டும் எனவும், இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் நிராகரிக்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச அரங்கில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் எனவும் வேண்டினார்.

அனைத்துத் தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விக்கி.கண்ணன் உரையாற்றும் பொழுது, தமிழகத்திலுள்ள ஏதிலியர் முகாம்களில் செயல்படும் பொது அமைப்புகளில் நீண்டகாலமாகத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை; எனவே முகாமில் உள்ள சிலர் சுயநலத்தோடு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும், முறையான தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியம் எனவும், குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் தங்களது முடிவுகளை ஏதிலியர்கள் மீது திணிப்பதோடு, “இலங்கை, ஒரு சொர்க்க பூமியாக இருக்கிறது. ஏதிலியர்கள் இப்பொழுது அங்கே சென்றால், ஆனந்தமாக வாழலாம்” எனப் பொய்யான பரப்புரையை மேற்கொண்டு, இலங்கை அரசுக்குத் துதிபாடிக் கொண்டிருக்கின்றனர் எனவும் வேதனை தெரிவித்தார். மேலும், தமிழகத்து முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்கு,
அக்குழந்தைகள் இலங்கையில் பிறந்ததாகப் பொய்யாகச் சான்றிதழ் பெற்றுத் தருகின்றனர் எனும் அதிர்ச்சிச் செய்தியும் அவர் வெளியிட்டார். இவற்றைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் வேண்டினார்.

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன், தமிழக முகாம்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார். அதே போல், இங்குள்ள சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வேண்டினார். அமெரிக்காவில் சிறப்பு முகாம்களில் இருந்தவர்கள், தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், இதுகுறித்த அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்புகளை இங்குள்ளவர்களுக்கு ஆதரவாக வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச அளவில், இலங்கைச் சிக்கலில் இந்தியாவின் ஆதரவை அவர் வேண்டினார்.

தேவகோட்டை மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த துரை நேசன், முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்பொழுது முகாம்களின் நிலைமை மேம்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். பாகுபாடு காட்டாமல், இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

கெலவரப்பள்ளி முகாமைச் சேர்ந்த சாரதா தேவி, 10′ x 10′ அறையில் கூனிக்குறுகி வாழ்ந்த வாழ்விலிருந்து தற்பொழுது மீண்டு வருவதாகவும், அதேபோல் குடியுரிமை தொடர்பாக நல்ல செய்தியை முகாமில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். தவிரவும், ஏதிலியர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற 100 இணையவழிக் கலந்துரையாடலுக்குத் தடை விதிக்காமல், நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனுமதித்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வை ஒருங்கிணைத்த இலண்டனைச் சார்ந்த இராசன் காந்தி, ஏதிலியர் மன்றத்தின் தொடர் செயல்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை நல்கி வரும் பல்வேறு அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், சனநாயக சக்திகள் ஆகியவற்றுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அடுத்தடுத்து முன்னெடுக்கப்படும் மன்றத்தின் பணிகளிலும் இதே ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என அவர் வேண்டினார். முகாம் ஏதிலியர்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகள், படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வருவதற்காகத் தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

புதுக்கோட்டை லேனா விளக்கு மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சுவேந்திரராஜ், முழு நிகழ்வையும் மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். கருத்துரை ஆற்றியவர்கள் தெரிவித்த சாரமான கருத்தினைத் தொகுத்து வழங்கியதோடு, அது குறித்த ஏதிலியர்களின் கண்ணோட்டத்தையும் திறம்படத் தெளிவு படுத்தினார்.

இறுதியாகத் தம்மம்பட்டி மறுவாழ்வு முகாமைச் சார்ந்த ரமேஷ் நன்றி நவின்றார்.

Leave a Response