சுதந்திரத் தமிழீழக்குடியரசு அமைவதொன்றே ஈழத்தமிழ் மக்களுக்கான ஒற்றைத்தீர்வு என சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
இலங்கையின் ஒற்றைமயமான வல்லாதிக்க அரசாங்கத்தின் கீழ் ஒருங்கிணைந்து தமிழர்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தவும், 13 ஆவது சட்டத்திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்தவும் வேண்டுமெனக்கோரி இந்தியப் பிரதமர் மோடியிடம் அந்நிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் பெருமக்கள் கோரிக்கை வைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலையை ஈழத்தாயகத்தில் நிகழ்த்தி, ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்த பிறகும் ஒற்றை இலங்கைக்குள் தமிழர்களை சிங்களர்களோடு ஒன்றிணைந்து வாழக்கோருவது மிகப்பெரும் அடிமைத்தனமாகும். ஈழப்படுகொலையைக் கண்முன்னே கண்ட ஈழ அரசியல் தலைவர்களே அதனை வலியுறுத்துவது பெரும் வேதனையைத் தருகிறது.
அறுபது ஆண்டுகால ஈழ விடுதலைப்போராட்டத்தில் பெறப்படாத நீதியையும், தீர்வையும் 13 ஆவது சட்டத்திருத்தம் முழுமையாகப் பெற்றுத் தந்துவிடும் என்பது துளியும் உண்மையில்லாப் பச்சைப்பொய்! ஈழத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் இக்கோரிக்கையின் மூலம் என்ன பயன் விளைந்துவிடப்போகிறது? ஒரு தலைமுறையாக தமிழர்கள் கேட்டுப் போராடி வரும் மரபுரிமையும், மண்ணுரிமையும், சமஉரிமையும், சமத்துவமும் இத்தகைய வெற்றுச்சட்டத்திருத்தங்கள் மூலம் கிடைத்துவிடுமா? அச்சட்டத்திருத்தம் நடைமுறையிலிருந்தபோதுதானே தமிழின மக்களைக் கொன்றொழித்தார்கள் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள். 13 ஆவது சட்டத்திருத்தம் வழங்கிய அதிகாரத்தின் துணைகொண்டு அத்தகைய இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடிந்ததா? தமிழர்களுக்கு உரித்தான உரிமைகள்தான் கிடைக்கப் பெற்றதா? தமிழர்களின் உயிரையே காக்க முடியாத அச்சட்டத்திருத்தம், அனைத்து உரிமையையும் தந்துவிடும் என்பது ஏமாற்று இல்லையா? அதற்காக அரசியல் தலைவர்கள் வரிந்துகட்டுவது முறைதானா? இரண்டு இலட்சம் தமிழர்களின் படுகொலைக்குப் பிறகும், அனைத்துலக நாடுகளும், பன்னாட்டுச்சமூகமும் கொடுத்திடாத நீதி, இச்சட்டத்திருத்தத்தின் வாயிலாக வந்துவிடப்போகிறது என நம்புவது எவ்வளவு பெரிய மடமை? 13 ஆவது சட்டத்திருத்தமே மோசடித்தனமெனக் கூறிவரும் நிலையில், அதனுள்ளிருந்த குறைந்தளவு அதிகாரத்தையும் குறைப்புசெய்திட்ட சிங்கள ஆளும் வர்க்கம் தமிழர்களுக்கான அதிகாரத்தையும், உரிமையையும் இனியும் நிலைநாட்டும் என நம்புவது அறிவுடைமைதானா?
இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தின் 15 ஆவது சட்டத்திருத்தமானது மாகாண நிர்வாகம் தொடர்பான உரிமைகள் அனைத்தும் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழே இருக்கும் என்று தெளிவாக வரையறுத்துக் கூறிய பிறகும், 13 ஆவது சட்டத்திருத்தத்திற்குத் தேவையென்ன இருக்கிறது? 15 ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் அதிகாரம் பெறும் ஆளுநர் சிங்களராக இருந்து தமிழர்களை வஞ்சிக்கும் வாய்ப்பை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? மாகாண அரசுகள் காணி உரிமை, காவல் உரிமை, நிதி உரிமையென அதிகாரங்கள் ஏதுமற்ற பொம்மை அரசாங்கங்களாக இருக்கும் நிலையில், வெற்று 13 ஆவது சட்டத்திருத்தத்தின் மூலம் என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?
இச்சட்டத்திருத்தம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவாக்கப்பட்டு, 33 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதில் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைபகிர்வுகள்கூட தமிழர்களுக்குக் கிடைத்திடாதச் சூழலில் அத்திருத்தத்தின் மூலம் இனியென்ன கிடைத்துவிடப்போகிறது? ஒரு தலைமுறைக்கு முன்பு, அன்றைய சிக்கல்களின் அடிப்படையில், தமிழர்களைக் கொஞ்சம்கூட கலந்தாலோசிக்காது இராஜிவ் காந்தியும் – ஜெயவர்த்தனேயும் தங்களுக்குள்ளே இட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட எதேச்சதிகார முடிவே 13 ஆவது சட்டத்திருத்தம். அது தமிழர்களுக்கு எவ்வித அதிகாரப்பகிர்வையோ, சமஉரிமையையோ, எத்தகைய தீர்வையோ பெற்றுத்தராது என்பதாலேயே தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அதனைத் தொடக்க நிலையிலேயே நிராகரித்தார். அத்தகைய மோசமானச் சட்டத்திருத்தத்தைக் காலங்கடந்து, தமிழர்கள் மீது செலுத்த முற்படுவது வரலாற்றுத்துரோகமாகும்.
தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடியதுதான் அமைதியானச் சூழலுக்கும், அதிகாரமயகாக்கலுக்கும், உரிமைகோரலுக்கும் தடையாக இருக்கிறதென்று உலக நாடுகள் மத்தியில் பரப்புரை செய்த இலங்கையின் ஆட்சியாளர்கள் விடுதலைப்புலிகளின் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட இந்த 12 ஆண்டுகளில் தமிழர்களின் சமஉரிமை வாழ்க்கை முறைக்கும், சமத்துவமான பாதுகாப்புச்சூழலுக்குமாகச் செய்ததென்ன? ஒன்றுமில்லையே! இனப்படுகொலைக்குப் பிறகு, ஈழத்தமிழ்ச்சொந்தங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் பன்மடங்காகப் பெருகி, பெருவடிவம் எடுத்திருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு முழுவதும் இராணுவமயமாக்கலாலும், திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்களாலும், தமிழர் வழிபாட்டுத்தலங்களது அழிப்பு நடவடிக்கைகளாலும், பௌத்தமயமாக்கலாலும் தமிழர்களின் தாயகம் முற்றாகச் சிதைக்கப்பட்டு வரும் வேளையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு என்ன செய்துவிடப்போகிறார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்?
இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியே இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களது நிலையும் என்னவென்றும் தெரியவில்லை. இனப்படுகொலைக்கான தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்கும் அனுமதி இல்லை. இவ்வாறு எதுவொன்றிலும் குறைந்தபட்ச நேர்மையைக்கூடக் கடைப்பிடிக்காத இனவெறி இலங்கை அரசு, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கி, அழகு பார்க்குமென எண்ணுவது அடிப்படை அறிவே இல்லாத அறியாமை இல்லையா? தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் நோக்கம், சிங்கள ஆட்சியாளர்களுக்கு அணுவளவாவது இருந்திருந்தால்கூட, தமிழர்கள் அரை நூற்றாண்டுகாலமாக உயிரீகம்செய்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் ஆயுதமேந்திப் போராடியபோதே வழங்காத அதிகாரங்களை, இனி தமிழ் மக்களுக்கு வழங்கிவிடுவார்கள் என எதிர்பார்ப்பது கேலிக்கூத்து! ஆகவே, 13வது சட்டத்திருத்தம் என்பது தமிழ்மக்களை ஏமாற்றித் தேர்தலில் வெற்றி அடையவும், ஈழத்தாயக விடுதலை எனும் உயர் இலட்சியத்திலிருந்து அவர்களைத் திசைதிருப்பவுமாகச் செய்யப்படும் சதிச்செயலே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றை இலங்கைக்குள் எவ்வித பிளவுமின்றி தமிழர்களும், சிங்களர்களும் ஒருமித்து, சமத்துவத்தோடும், சம உரிமையோடும் வாழமுடியும் என்பது எக்காலத்திலும் சாத்தியப்படாத ஒன்று. சுதந்திரத் தமிழீழக் குடியரசு ஒன்றே ஈழத்தமிழ் மக்களுக்கான ஒற்றைத்தீர்வு என்பதே எவராலும் மறுக்கவியலா வரலாற்றுப்பேருண்மையாகும்.
13 ஆவது சட்டத்திருத்ததை நடைமுறைப்படுத்தக்கோரி, ஈழ அரசியல் தலைவர்கள் இந்தியாவிடம் முறையிடுவதும், மன்றாடுவதும் தேவையற்றது. தற்போதைய நிலையில் இலங்கை நாடானது முழுக்க முழுக்க சீனாவின் கைப்பாவையாகி, காலனி நாடாக மாறி நிற்கும் வேளையில், இந்தியாவின் தலையீட்டை அது ஏற்கப்போவதுமில்லை; சீனா அதை அனுமதிக்கப்போவதுமில்லை. தமிழகத்து மீனவர்களையே இலங்கை இராணுவத்தின் அத்துமீறியத் தாக்குதல்களிலிருந்து காக்க முடியாத இந்திய நாடு, ஈழத்தமிழர்களின் சிக்கலைத் தீர்க்கும் என எண்ணுவது வேடிக்கையானதாகும். எல்லாத் தேசிய இனங்களையும் போல தமிழர்கள் சம உரிமைபெற்று, சுதந்திரமாக வாழ வேண்டுமென்றால், அதற்குச் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய விடுதலைப்பெற்ற தனித்தமிழீழத் தாயகம் அடைவதே, ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துச் சிக்கல்களுக்குமான நிரந்தரத்தீர்வாக அமையும் என்பதே உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒற்றை நிலையாக இருக்கிறது. இதில் சமரசம்செய்துகொண்டு, தமிழ் மக்களை அடகு வைத்து, மாவீரர்களது உயரியப் புனித இலட்சியத்தை நீர்த்துப் போகச் செய்யும் எந்தவொரு கொடும் சூழ்ச்சியையும் தமிழ்ச்சொந்தங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அது ஈழ நிலத்தில் வீரவிதைகளாக விழுந்துள்ள மாவீரர் தெய்வங்களின் பெரும் ஈகத்திற்குச் செய்யும் கொடுந்துரோகமாகும்.
ஆகவே, தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களே நிராகரித்திட்ட 13 ஆவது சட்டத்திருத்தத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த இந்திய அரசிடம் கோரும் முடிவைக் கைவிட வேண்டுமெனவும், இனப்படுகொலைக்குத் தலையீடற்ற பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணை செய்யவும், தமிழீழ விடுதலைக்கான முன்நகர்வானப் பொதுவாக்கெடுப்பினை நடத்தவுமாக அரசியல் அழுத்தத்தையும், அணிசேர்க்கையையும் அனைத்துலக நாடுகளிடமும், பன்னாட்டுச்சமூகத்திடமும் செய்ய வேண்டுமெனவும் ஈழ அரசியல் தலைவர் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.