நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். எளிய பின்புலம் கொண்ட மக்கள், அதிகார அடுக்குகளில் அமர்வதற்கான வாய்ப்பாக இருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் அவர்களின் சனநாயகப் பங்கேற்பினை தடை செய்வதுபோல, கட்டுத்தொகையை இரட்டிப்பாக உயர்த்திருக்கும் தமிழகத்தேர்தல் ஆணையத்தின் முடிவு கண்டனத்திற்குரியது.

அரசியல் என்பது வணிகமாகவும், கட்சிகள் என்பவை நிறுவனங்களாகவும், பணம் என்பது தேர்தல் அரசியலின் அச்சாணியாகவும் மாறிப்போயிருக்கிற தற்காலக் கொடுஞ்சூழலில், அவற்றிற்கெதிராக அடித்தட்டு உழைக்கும் மக்களும், எளிய மனிதர்களும் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கையில், வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையினை உயர்த்தியிருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 என உயர்த்தப்பட்டிருக்கும் இக்கட்டுத்தொகை எளிய மனிதர்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெருஞ்சுமையாக மாறக்கூடும். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முதன்மை பெற்றிருக்கும் இத்தேர்தல் களத்தில், அதற்குத் தடைக்கற்களாக இத்தொகை உயர்வு இருக்குமென்பதால், பழைய நடைமுறையைப் பின்பற்றுவதே சரியாக இருக்கும். ஆகவே, வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகை இரட்டிப்பு மடங்காக்கும் அறிவிப்பினை தமிழகத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response