சட்டவிதி எண் -3 இன்படி ஈஷா மையத்தைக் கையகப்படுத்துக! – ததேபே கோரிக்கை

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 2021 திசம்பர் 18 – 19 நாட்களில், தஞ்சை தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன்,தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, பழ.இராசேந்திரன், க.அருணபாரதி, கோ.மாரிமுத்து, க.முருகன், க.விடுதலைச்சுடர், பி.தென்னவன், மு.தமிழ்மணி, வே.க.இலக்குவன், இரா.வேல்சாமி, தை.செயபால், மா.மணிமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

தமிழர் ஆன்மிகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவித்து வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை
தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்க வேண்டும்!

கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை, தமிழர் ஆன்மிகத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

ஈஷா மைய வளாகத்தில் நிறுவப்பட்டு வழிபாடு நடக்கும் தியான லிங்கம் கோயில் மற்றும் ஆதியோகி என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள சிவன் சிலை ஆகியவை இந்து மற்றும் சைவ நெறிகளுக்கும், ஆகம விதிகளுக்கும் புறம்பான வகையில் அமைந்திருக்கின்றன.

இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of Tamil Nadu – Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்துள்ளது.

ஈஷா யோக மையம் அமைந்துள்ள பகுதி யானைகள் வழிதடம் (வலசை பாதை) என்று 17.8.2012 நாளிட்ட கடிதத்தில் ( ந.க. எண் : வ1/8120/2011 ) அன்றைய மாவட்ட வன அலுவலர் தெளிவாகக் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 17.09.2021 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு கடிதம் ( அலுவலக கடித எண் : u1/6161/2021 ) வழியே பதில் அளித்துள்ள, கோவை மாவட்ட வன அலுவலர் ஈஷா யோகா மையம் அறிவிக்கப்பட்ட யானை வழித்தடத்தில் இல்லை என்று கூறியுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு, ஈஷா யோகா மையம் யானைகள் வழித்தடத்தில் இருப்பதாகக் கூறிய அதே தமிழ்நாடு அரசின் மாவட்ட வன அலுவலர், தற்போது தி.மு.க. அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் மாற்றிக் கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. பொய்யான தகவலை அளித்துள்ள அதிகாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனப்பகுதிக்கு மிக அருகிலேயே கட்டடங்கள் எழுப்பியது, நிதி மோசடியில் ஈடுபட்டது, பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்தது, தமிழர் சிவநெறி – திருமால் நெறி ஆன்மிகத்திற்கு எதிரான செயல்பாடுகள் என தொடர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வரும் ஈஷா மையம் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 2

பாவேந்தர் பாரதிதாசனின் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாகத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்!

தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக “மனோன்மணீயம்” நாடக நூலில் தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்கள் இயற்றிய “நீராருங் கடலுடுத்த” பாடலை அறிவித்துள்ளது. இப்பாடல் 1891 ஆம் ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணீயம் நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் எனும் தலைப்பில் இயற்றப்பட்ட பாடலாகும்.

இப்பாடல் தமிழ்த்தாய்க்கு வணக்கம் செலுத்தி மட்டும் எழுதப்படவில்லை. பாரதத் தாய், திராவிடத் தாய் என முத்தாய்களுக்கு வணக்கம் செலுத்தி எழுதப்பட்டுள்ள நிலையில், அதை “தமிழ்த்தாய் வாழ்த்து”ப் பாடல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல!

அதற்குப் பதிலாக, தமிழ் மொழியின் சிறப்பை விளக்கும் வகையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்றிய “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே!” பாடலை தமிழ்நாடு அரசு – தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவிக்கலாம். புதுச்சேரி அரசு, இப்பாடலை ஏற்கெனவே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியின் சிறப்பை – பெருமையை விளக்கி, தமிழரை இன உணர்வு பெறச் செய்யும் பாவேந்தரின் பாடலை தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டுப் பாடலாக அறிவிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 3

அதிகார ஆணவத்தோடு தமிழ்நாட்டு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு துணை போவது கண்டனத்திற்குரியது!

தமிழ்நாட்டின் ஆளுநராக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.என். இரவி அவர்கள், தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் தொடர்ந்து அத்துமீறி தலையிட்டு வருகின்றார். அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்வது, தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை அழைத்துத் தனியே பேசுவது, இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்தி மேடைகளில் பேசுவது என இந்திய அரசின் நேரடிப் பேராளராக ஆளுநர் இரவி செயல்பட்டு வருகின்றார்.

கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், இதேபோல் அரசு அலுவலகங்களின் நிர்வாகத்தில் “ஆய்வு” என்ற பெயரில் தலையிட்ட போது, அதைக் கடுமையாக எதிர்த்துப் போராட்டங்கள் நடத்திய தி.மு.க., இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஆளுநரின் அத்துமீறல்களை உரிய முறையில் கண்டிக்காததோடு, அவற்றுக்குத் துணைபோகும் துரோக நடவடிக்கையிலேயே இறங்கிவிட்டது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆளுநர் கேட்கும் கோப்புகளை அளிக்க அணியமாகும்படி அனைத்துத் துறைச் செயலாளர்களுக்கும் 18.10.2021 அன்று கடிதம் அனுப்பினார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஒப்பதலோடுதான் இக்கடிதம் எழுதப்பட்டதாக அவர் விளக்கமும் அளித்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மண்ணின் மக்களை அடிமைப்படுத்தி – ஒடுக்கி – நிர்வாகம் செய்ய ஏற்படுத்தப்பட்ட “ஆளுநர்” பதவி, இந்திய ஏகாதிபத்திய காலனிய ஆட்சியிலும் தொடர்கின்ற நிலையில், அதன்வழியே நடைபெறும் அதிகார மீறல்களைக் கண்டித்து தி.மு.க. அரசு கேள்வி எழுப்பாமல் அமைதி காப்பதையும், அத்துமீறல்களுக்குத் துணை போவதையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது!

தீர்மானம் – 4

புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டும்!உரிமைப் பறிப்புகளைக் கைவிட வேண்டும்!

தமிழ்நாட்டைப் போலவே தமிழரின் இன்னொரு தாயகமாக உள்ள புதுச்சேரி, இந்திய அரசின் நேரடி ஒன்றிய ஆட்சிப் பகுதியாக – அரசியல் அதிகாரமற்ற நிலையில் உள்ளது. தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை விட, இந்திய அரசின் துணைநிலை ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் என்ற நிலை நீடிக்கிறது.

அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்வது, பேரிடர்களின் போது மக்களுக்கு துயர் துடைப்பு பொருட்கள் – நிதி வழங்குவது போன்ற அனைத்துமே புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை முடிவெடுத்தாலும்கூட, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

தனி மாநிலத் தகுதி பெறாத நிலையில், புதுச்சேரியிலிருந்து வசூலிக்கப்படும் ஒன்றிய அரசின் வரிகளில் புதுச்சேரிக்கு முறையான பங்கு அளிக்கப்படுவதில்லை. தனி கல்வி வாரியமோ, தொல்லியல் துறை போன்ற அடிப்படையான துறைகளோ இல்லை! தமிழர்களின் அரசியல் முடிவுகள் எதற்கும் அரசு நிர்வாகம் கட்டுப்படாது என்ற அவலநிலை உள்ளது.

இந்நிலையில், தற்போதுள்ள புதுச்சேரி ஒன்றிய அரசின் சிறுசிறு உரிமைகளைக் கூட பறிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபடத் தொடங்கிவிட்டது. புதுச்சேரி மக்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் எதிர்க்கும் நிலையில் மின்துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை இந்திய அரசு ஒருதலைச்சார்பாக அறிவிக்கிறது.

எனவே, புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்கி, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 5

பெருமழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஞாயமான நிவாரணத் தொகையை உடனே வழங்குக!

தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை – சம்பா – தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், மாநிலக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் எட்டு அமைச்சர்கள் அடங்கிய குழுவினரும் பார்வையிட்டனர்.

முழுமையாகச் சேதமடைந்த குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000, நீரில் மூழ்கி சேதமடைந்த சம்பா – தாளடி பயிர்களுக்கு மறு சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 6,038 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படும் என கடந்த 16.11.2021 அன்று முதல்வர் அறிவித்தார். நெற்பயிர்களுக்கு சாகுபடி செலவு, ஏக்கருக்கு ரூபாய் 30,000 என்பதே நடைமுறை உண்மை! ஒரு ஹெக்டேருக்கு சாகுபடி செலவு ரூபாய் 75,000. ஆனால், அரசு அறிவித்துள்ளதோ வெறும் ரூபாய் 20,000! அந்தத் தொகையையும் இன்னும் வழங்கவில்லை, அதற்கான அரசாணை இன்னும் வெளியிடவில்லை என உழவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து உழவர்களுக்கு ஞாயமான இழப்பீடாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் – 6

திவாலாகிப் போனது தமிழ்நாடு! செழிப்பாக்கிடப் புதுப்பாதை தேவை!

தமிழ்நாட்டில் மிகப்பெருமளவில் வேலையின்மையும், வறுமையும் தாண்டவமாடுகிறது. அரசின் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு சற்றொப்ப ஒரு கோடி பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர். ஏற்கெனவே பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பணியில் இருப்போரில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த ஊதியம் என்ற பல பெயர்களில் மூன்றரை இலட்சம் பேர் அரைகுறை ஊதியம் பெறுவோர். 2003 – 2004லிருந்தே இவ்வாறு பணியமர்த்தம் செய்யப்பட்டவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. இதற்கப்பாற்பட்டு, வெளிப்பணி (Outsourcing) முறையில் பணியாற்றுவோர் ஏராளம்!

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்கள், தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் உள்ள 14 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையிலான பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர் என்றும், அரசிடம் போதுமான நிதி இல்லாததால் 6 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் கூறுகிறார். இதனால் வேலையில்லா தமிழர்களின் வேதனை அதிகரிப்பது ஒருபக்கம் – அனைத்துத் தமிழ் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை அரசுத்துறை நிறைவேற்ற முடியாத அவலம் மறுபக்கம்!

மக்களுக்கான வாழ்வுரிமையை தமிழ்நாடு அரசு கைகழுவி விட்டதாகவே தெரிகிறது. தனியார் துறையில் – மண்ணின் மக்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் இந்திக்காரர் களையும், இன்னபிற வெளி மாநிலத்தவரையும் அவரவர் விருப்பத்திற்கு வேலையில் சேர்த்துக் கொள்ளும் தமிழின இரண்டகம் அன்றாடம் அரங்கேறுகிறது. இந்த வெளியாரின் வேட்டைக்கு அ.தி.மு.க. – தி.மு.க. ஆட்சிகள் துணை செய்வதே வழக்கமாக உள்ளது.

இவை ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் தமிழ்நாடு அரசின் கடன்சுமை பெருமளவில் அதிகரித்து வருகின்றது. தமிழ்நாடு அரசிற்கு நேரடியாக உள்ள கடன் 5,70,1895 கோடி ரூபாய்! தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மட்டும் 1,24,974.49 கோடி ரூபாய்! ஆக மொத்தம் சற்றொப்ப 7 இலட்சம் கோடி ரூபாய்க் கடனாளியாகத் தமிழ்நாடு தவிக்கிறது. இவையெல்லாம் இப்போதுள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள்!

ஆனால், மக்களை மயக்குவதற்கு ஏதாவது இலவசங்களை அறிவித்து ஏமாற்றுவது அ.தி.மு.க. – தி.மு.க. ஆட்சியாளர்களின் வாடிக்கையாக உள்ளது. இப்பொழுதும் இந்த ஏமாற்று வேலையே தொடர்கிறது.

தமிழர்களின் சிறுதொழில்கள் வளர்ச்சி வாய்ப்பின்றி மூடப்படுகின்றன. மார்வாடி – குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் மற்றும் வெளி மாநில முதலாளிகள் வேட்டை தமிழ்நாட்டில் கோலோச்சுகிறது. உரிய வேலை – உரிய ஊதியமின்றி மண்ணின் மக்கள் வறுமையிலும் கடனிலும் மூழ்கித் தத்தளிக்கின்றனர். இதனால், குழந்தைகளையும் கொன்றுவிட்டு, பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.

அண்மையில் வெளியான இந்திய அரசின் “தேசிய குடும்ப நலவாழ்வு அறிக்கை” பல குறைபாடுகள் உடையது. இதன் அடிப்படையில் நேரடியான கள ஆய்வின்றி அணியம் செய்யப்பட்ட “பல்நோக்கு வறுமைக் குறியீட்டு” அட்டவணையில், வறுமைக் குறைவான மாநிலங்களின் முன்வரிசையில் தமிழ்நாடு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறைபாடுடைய இந்தக் கணக்கீட்டில் கூட, சத்துக் குறைபாடு கொண்டோர் தமிழ்நாட்டில் 2 கோடி பேர் என்று கூறியுள்ளார்கள்.

இந்த அகாசுகா “வளர்ச்சி”யைத் தான் “திராவிட வளர்ச்சி வடிவம்” (திராவிட மாடல்) என்று தி.மு.க. ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள்.

இந்திய மற்றும் வெளிநாட்டுப் பெருங்குழுமங்கள் தமிழ்நாட்டைச் சூறையாட கதவு திறந்து விடுவதை “தொழில் வளர்ச்சி” என்றும், மக்களுக்கான வேலை வாய்ப்பு என்றும் திரித்துப் பேசி தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுத்து, மண்ணின் மக்களின் தொழில் உரிமையையும், வேலை உரிமையையும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பறித்து வருகிறார்கள்.

இவ்வாறான அழிவுப் பாதையைக் கைவிட்டு, சுற்றுச்சூழல் கெடாத அளவுக்கு வரம்புகட்டி, மண்ணின் மக்களுக்கே தொழில்துறை வாய்ப்புகளை வழங்க வேண்டும். தனியார் துறையில் 90 விழுக்காடும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடும், தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடும் தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டமியற்ற வேண்டும்.

இந்நிலைமையை சரி செய்ய, முதலில் வரி அதிகாரம் முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு வேண்டும். தமிழ்நாட்டில் இந்திய அரசு எந்த வரியும் வசூலிக்காமல் எல்லாவகை வரியையும் தமிழ்நாடே வசூலிக்க வேண்டும். அதில் 25% விழுக்காட்டை மட்டும் இந்திய அரசுக்கு வழங்க வேண்டும். இப்படிப்பட்ட நிதி ஆட்சி உரிமையைப் பெற இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்தால் – தமிழ்நாட்டு மக்கள் அதற்கு ஆதரவாக அணிதிரள்வார்கள்.

மண்ணையும், மண்ணின் மக்களையும் காக்கும் மாற்றுப் பாதையில் தமிழ்நாடு அரசு திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்படும்படி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, ஒட்டுமொத்தத் தமிழர்களும் பல்வேறு வடிவங்களில் வலியுறுத்த வேண்டும்!

தீர்மானம் – 7

கன்னியாகுமரி மலைகளைக் கனிமவளக் கொள்ளையிலிருந்து பாதுகாக்க வேண்டும்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் தொடக்கமாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மலையைப் பிளந்து கேரளா நடத்தும் கனிமவள வேட்டை கடும் அதிர்ச்சியளிக்கிறது.

கேரளத்தில் அதானி துறைமுகக் கட்டுமானத்திற்கு 80 இலட்சம் டன் மலைக் கற்கள் தேவை என்றும், அதை தமிழ்நாட்டு மலைகளிலிருந்து எடுத்துக் கொள்வது என்றும் கேரள ஆட்சியாளர்கள் திட்டம்தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 30 இலட்சம் டன் மலைக்கற்கள் கொண்டு போய்விட்டதாக கேரள துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் கூறுகிறார். மீதியுள்ள 50 இலட்சம் டன்னும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து எடுக்கப்போவதாக அவர் கூறுகிறார். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு இருந்ததாகவும், அதை “சரி செய்து விட்டதாகவும்” அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது தமிழ்நாட்டின் மழை வளம், சுற்றுச்சூழல் செழிப்புக்கு மட்டுமின்றி, குசராத் வரையுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இயற்கை வழங்கும் செல்வமாகும். இதன் தமிழ்நாட்டு உறுப்புகளை வெட்டிக் காலி செய்யும் வேலையை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அனுமதித்திருக்கிறார்கள். இந்த இயற்கை அழிப்பு, மக்களின் எதிர்கால அழிப்பு வேலைகளுக்காக தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள், அ.தி.மு.க. – தி.மு.க. கட்சிகளின் தலைவர்கள் அதானியிடம் கையூட்டுப் பெற்றார்களா இல்லையா என்பதையும், கையூட்டு பெற்றிருந்தால் எத்தனை கோடி பெற்றார்கள் என்பதையும் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த – பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

கேரள அதானி துறைமுகத்திற்காக மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அழிப்பதை நிறுத்த உடனடியாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விரு கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களும் வீதிக்கு வந்து அறப்போராட்டம் நடத்தி தமிழ்நாடு அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Response