சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த தம்பி மணிகண்டன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்…
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, மர்மமான முறையில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து ஆற்ற முடியாதப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நல்ல உடல்நலத்தோடு இருந்த மணிகண்டன் திடீரென மரணித்திருப்பது காவல்துறையினர் தாக்குதலால் நிகழ்ந்ததாக இருக்கலாம் என அவரது பெற்றோரும், பொதுமக்களும் தெரிவிக்கும் ஐயப்பாட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.
காவல்துறையின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவ்வப்போது மரணமடைவதும் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் நடந்தேறியிருக்கிற தம்பி மணிகண்டனின் மரணம் கொலையாக இருக்கலாம் எனும் வாதத்தில் அடிப்படையில்லாமலில்லை.
ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என இவ்வறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.