மம்தா பானர்ஜியை அவமதித்த மோடி – பழ.நெடுமாறன் கண்டனம்

இத்தாலியின் ரோம் நகரில் அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் சர்வதேச மத அமைதி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடப்பட்டது.

மாநில முதல்வர்கள் வெளிநாடு செல்ல மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி தேவை. ஆனால், மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி உலகத் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அளவிலான அரசு பதவியை வகிக்கவில்லை என்று கூறி அவர் இத்தாலி செல்ல ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

இந்நிலையில், பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, அங்கு நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் (செப்டம்பர் 26) பேசியதாவது……

ரோமில் நடக்கும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். ஜெர்மனி அதிபர், போப் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆனால், ரோம் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்தது. ஒரு முதல்வருக்கு இதுபோன்று அனுமதி மறுப்பது சரியல்ல. பழிவாங்கும் குணம், பொறாமையால் மத்திய அரசு எனக்கு அனுமதி மறுத்துள்ளது. நான் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல விரும்பவில்லை, ஆனால் இது தேசத்தின் கவுரவம் தொடர்பானது. பாஜக அரசு இந்துக்களின் நலன்கள் பற்றி பேசுகிறது. ஆனால், இந்துப் பெண்ணான எனக்கு மாநாட்டில் கலந்து கொள்ள ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

இந்நிகழ்வுக்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது…..

இந்திய ஒன்றியத்தின் தலைமையமைச்சரும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தவிர, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்களல்லர்.

அதைப்போலவே, மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அந்தந்த மாநில மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பெற்று இப்பதவிப் பொறுப்புகளில் அமர்ந்தவர்களே தவிர, மாநில ஆளுநராலோ அல்லது ஒன்றிய அரசினாலோ நியமிக்கப்பட்டவர்களல்லர்.

ஒன்றியத்தின் தலைமையமைச்சரும், அமைச்சர்களும் தங்களின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கம் கூறவேண்டிய பொறுப்புக்கு உள்ளானவர்கள். அதைபோல, மாநில முதலமைச்சரும், அமைச்சர்களும் தங்களின் செயல்பாடுகள் குறித்து சட்டமன்றத்திற்குப் பதில் கூறவேண்டிய பொறுப்பிற்கு ஆளானவர்கள். மக்களாட்சியின் இந்த அடிப்படைத் தத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமே ஆகும். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்பது இல்லை. பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் கூட்டாட்சியே இந்தியாவாகும். ஒன்றிய அரசின் அதிகார எல்லைகளையும், மாநில அரசுகளின் அதிகார எல்லைகளையும் அரசியல் சட்டம் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் வரையறுத்துள்ளது. இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்களையும் அரசியல் சட்டம் குறித்துள்ளது. ஆனால், இந்த எல்லையைக் கடந்து ஒன்றிய அரசு அத்துமீறி செயல்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேற்குவங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களை இத்தாலிய நாட்டுக்குச் செல்ல இந்திய அரசு அனுமதியை மறுத்திருப்பது அப்பட்டமான அதிகார மீறலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சருக்கு எந்த நாட்டுக்கும் செல்லும் உரிமை உண்டு. மம்தா உல்லாச சுற்றுப்பயணம் செய்வதற்காகவோ, நாட்டின் அந்நியச் செலாவணியை வீணடிக்கும் வகையிலோ மம்தா செல்லவில்லை. மாறாக, இத்தாலியில் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அழைப்பின் பேரிலேயே அவர் செல்லவிருக்கிறார். அதிலும், குறிப்பாக ஆசிய நாடுகளின் சார்பில் அழைக்கப்பட்டுள்ள ஒரே பிரதிநிதி அவர் ஆவார். அவருக்கு அளிக்கப்பட்ட இந்தப் பெருமை இந்தியா முழுமைக்குமே உரியதாகும் என்பதைக்கூட எண்ணிப் பார்க்காமல், அவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்துள்ள இந்திய அரசின் பேதமையைக் கண்டு உலகம் நகைக்கிறது.

மாநில முதலமைச்சர்கள் மாநில மக்களின் பிரதிநிதிகளாவார். அவர்களை அவமதிப்பது அந்த மாநில மக்களையே அவமதிப்பதாகும். ஒன்றிய அரசு ஆட்டுவித்தபடியெல்லாம் ஆடுவதற்கு அவர் பொம்மையல்ல. ஒன்றிய அரசை வழிநடத்திச் செல்லும் கடமையும், பொறுப்பும் எவ்வாறு தலைமையமைச்சருக்கு உண்டோ, அதைபோல மாநில அரசை வழிநடத்திச் செல்லும் கடமையும், பொறுப்பும் முதலமைச்சர்களுக்கு உண்டு. மாநில முதல்வர்களைத் தனக்குச் சமமாக நடத்தும் மனப்பக்குவத்தை தலைமையமைச்சர் பெறவேண்டும்.

இந்தியாவின் முதல் தலைமையமைச்சராக சவகர்லால் நேரு இருந்தபோது, உலகப் பிரச்சனைகள் குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகளைப் பற்றி மாநில முதல்வர்களுக்கு மாதந்தோறும் கடிதம் எழுதும் உன்னதமான மரபினைப் பின்பற்றினார். உலகப் பிரச்சனைகள் குறித்து மாநில முதல்வர்களுக்கு எதுவும் தெரியவேண்டியதில்லை. அவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ளவேண்டியதுமில்லை என்பது போன்ற தன்மூப்பான நடவடிக்கைகளை அவர் ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. இந்தியாவை வழிநடத்துவதில் மாநில முதல்வர்களை தனது சகப் பங்காளிகளாக அவர் கருதி மதித்தார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அவமதிப்பு நாளை பிற மாநில முதலமைச்சர்களுக்கும் ஏற்படலாம். எனவே, அனைத்து மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசின் இந்தப் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிக்க முன்வரவேண்டும். மக்களாட்சியின் மாண்பையே சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response