டி 23 புலியைச் சுட்டுக் கொல்லும் முடிவு – விவசாய சங்கத் தலைவர் எதிர்ப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் யானை மற்றும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து அச்சுறுத்துவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கிக் கொன்று வருகிறது.

தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை புலி தாக்கியது. இதில் கடுமையான காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக புலியைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சித்து வருகின்றனர். புலியைப் பிடிக்கும் பணியில் சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏழு நாட்களாக வனத்துறையினர் போராடியும், புலியைப் பிடிக்க முடியவில்லை. இதனால் தேவன் எஸ்டேட் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனிடையே தேவன் எஸ்டேட் பகுதியில் இருந்த டி23 புலி சிங்காரா பகுதிக்குள் சென்றது. சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்பவரை புலி கடித்துக் கொன்றுவிட்டு, வனத் துறையிடம் இருந்து தப்பிச் சென்றது. ஒரு வாரத்திலேயே இரண்டு பேரை புலி கொன்றதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

டி 23 புலி இதுவரை 4 பேரையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கிக் கொன்றுள்ளது.

இதனால்,அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

இப்போது, டி 23 புலியைச் சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புலியைத் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு பாஜக விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….

இந்தியாவின் தேசிய விலங்கான அழிந்துவரும் இனமான கூடலூர் தேவர் சோலைப்பகுதியில் புலி(T 23) ஒருவரைத் தாக்கிக் கொன்றது.அதைக்கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறை தோல்வியடைந்ததால்,அதைச் சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை அதிகாரி திரு.சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக புலி காயமடைந்து வேட்டையாடும் திறன் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, மிக எளிதாகக் கிடைக்கும் இரையான மனிதர்களை வேட்டையாடும்.எனவே அப்புலியை நவீனகால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பத்திரமாக மீட்டு வனவிலங்கு பாதுகாப்புப் பூங்காவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.அதற்கு மாறாக அழிந்துவரும் இனமான புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

வனப்பகுதியினை பெருமளவில் மக்கள் ஆக்கிரமித்துவரும் வேளையில், இதுபோன்ற சுட்டுக்கொல்லும் உத்தரவு அரியவகை வனவிலங்குகள் அழிவிற்கு முன் உதாரணமாகவும்,முக்கிய காரணமாகவும் அமைந்துவிடும்.

எனவே கடும்முயற்சியெடுத்து,புலியை பாதுகாப்புடன் மீட்டு, வனவிலங்கு பாதுகாப்பு பூங்காவில் உரிய சிகிச்சை அளித்து,பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response