கல்மனத்தவரும் கண்ணீர் கொட்டி, கனல் பட்ட வெண்ணெய் எனக் கரைவார் – வ.உ.சி 150 ஆவது பிறந்தநாள்

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம்.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் சைவ வெள்ளாளர் மரபில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வேறு யாரும் சிந்திக்காத வகையில் சிந்தித்த இவர், பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.இதன் காரணமாக பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்பட்ட அவர், 1936 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் மறைந்தார்.

இன்று அவருடைய 150 ஆவது பிறந்தநாள்.

முன்னெப்போதைக் காட்டிலும் இவ்வாண்டு அவர் பிறந்தநாள் கொண்டாட்டம் பெரிதாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு கோவையில் அவருக்கு முழு உருவச் சிலை உட்பட பல திட்டங்களை அறிவித்துள்ளது.

வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள் வேறு எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு (05/09/2021) மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டு விடுதலைக்காகத் தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்தவர் வ.உ.சி. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என அறிவுறுத்தியவர்.

“மக்கள் தங்களது உரிமையை உணராமல் அடிமையில் உழன்று நம்பிக்கையற்றுக் கிடக்கும் பொழுது, அவர்கள் அஞ்சி நடுங்கத்தக்க வகையில் அளப்பரிய தியாகம் செய்து அவர்களை எழுச்சி கொள்ளச் செய்பவரே மக்களுக்கு வழிகாட்டியாக விளங்க முடியும்” எனப் பிரகடனப்படுத்திய பகத்சிங்கின் நெருப்பு வரிகளுக்கு நிலையான சான்றாக விளங்கியவர் வ.உ.சி.

விடுதலை குறித்து இந்திய அளவு சிந்தித்தாலும், தமிழக அளவில் செயல்படுவதையே தன் செல்நெறியாகக் கொண்டிருந்தார்.

ஆங்கிலேயரின் அதிகாரம், பொருளாதாரத்தில் அடங்கியுள்ளது எனும் சூட்சுமத்தைத் துல்லியமாகக் கண்டறிந்தார். வெள்ளையர்களின் அதிகார முதுகெலும்பை முறிக்கத் திட்டமிட்டார். தமிழர்களின் மரபணுவிலேயே ஊறி நிற்கும் கடல் ஆளுமை அவருள்ளும் தழும்பி வழிந்ததால், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கப்பலோட்டி ஆளும்வர்க்கத்தை கதிகலங்கச் செய்தார்.

அதேபோல் தூத்துக்குடி கோரல் நூற்பாலைப் போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காகச் சமரசமின்றிப் போராடினார். இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்காக நடைபெற்ற முதற்பெரும் போராட்டமாக அது அமைந்தது.
நினைத்தாலே அஞ்சி நடுங்கத் தக்க வகையில் ஆங்கிலேயர்களுக்குக் கொடும் கனவாக விளங்கியவர் வ.உ.சி. “வெறுக்கத்தக்க ராஜ துரோகி. வஉசியைக் கொன்றாலும் அவரது எலும்புக்கூடு வெள்ளை அரசுக்கு எதிராகப் போராடும்.

வ உ சி சொற்பொழிவைக் கேட்டால், செத்த பிணமும் உயிர்த்தெழும். அடிமைப்பட்ட நாடு, ஐந்தே நிமிடத்தில் விடுதலை அடையும்” என இவருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹே குறிப்பிட்டான்.
சமத்துவத்தையும்,சமநீதியும் தன் வாழ்வின் இலக்குகளாக கொண்டிருந்தார்.

பெண்ணுரிமை குறித்து மிகவும் புரட்சிகரமான கருத்துக்களைப் பல்லாண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தினர். மதுவின் கொடுமைகள் குறித்து அக்காலத்திலேயே எச்சரித்தார். தமிழுக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் வேண்டுமெனப் பரிந்துரைத்தார். சித்த மருத்துவத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தத் தொடர் பரப்புரை மேற்கொண்டார்.

மிகச்சிறந்த தமிழ் அறிஞராக திகழ்ந்தார். தனது சுயசரிதையைக் கவிதை வடிவிலேயே வெளியிட்டார். திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றிற்குச் சிறந்த உரைகளைப் பதிப்பித்தார். ஜேம்ஸ் ஆலனின் நூல்களை அழகுற மொழியாக்கம் செய்தார்.

இந்திய நாட்டிலேயே இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வ.உ.சி அவர்களுக்கு மட்டும்தான். சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட சித்திரவதைகளை இப்போது நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சம் நடுநடுங்குகிறது.

“கல்மனத்தவரும் கண்ணீர் கொட்டி,
கனல் பட்ட வெண்ணெய் எனக் கரைவார் இன்றும் ” என இவரது சிறைவாழ்வு குறித்து நாமக்கல் கவிஞர் வருந்தினார்.

“மக்கள் தங்களது உரிமைகுறித்து உணர்ந்து கொள்ளாமல் அடிமைகளாய் முடங்கிக் கிடக்கும் பொழுது அவர்கள் அஞ்சி நடுங்கத்தக்க வகையில், தியாகம் செய்ய முன்வருபவரே மக்களுக்கு வழிகாட்டியாக விளங்க முடியும்” என பகத்சிங் சுட்டிக்காட்டியதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் செக்கிழுத்த செம்மல் அவர்கள்.
அதனால் தான் தந்தை பெரியார் அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடும் பொழுது, “நாட்டின் விடுதலைக்காகக் குடும்பத்தோடு நாசம் அடைந்தவர் ஒருவர் உண்டு என்றால், அவர் வ உ சிதம்பரனார் அவர்களே ஆவார்” என அடையாளம் காட்டினார்.

“சேதாரமில்லாமல் நகை
செய்ய முடியாது.
சிலரேனும் மடியாமல்
பகை வெல்ல முடியாது” எனச் சாலை இளந்திரையன் குறிப்பிட்டதற்கு இவரது வாழ்வே சான்றாகும்.

பல நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் உயராளுமையாக, தமிழ் விழுமியங்களின் தன்னிகரற்ற பேருருவாக வ உ சி என்றும் திகழ்வார். அவரை உச்சிமேல் வைத்துக் கொண்டாட வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் தலையாய கடமையாகும்.

– கண.குறிஞ்சி

Leave a Response