அரசாங்க சொத்துகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் மோடி அரசு – முழுமையான விவரங்கள்

ரூ.6 இலட்சம் கோடியைத் திரட்டுவதற்காக அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் அறிவிப்பு, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, தொடர்வண்டி நிலையங்கள் உள்பட 12 அமைச்சகங்களின் சொத்துகள் விற்கப்பட உள்ளன.

இவற்றில், தேசிய நெடுஞ்சாலைகள் ஏலம் மூலம் ரூ.1,62,200 கோடி,தொடர்வண்டித்துறை மூலம் ரூ.1,52,496 கோடி, மின் தொகுப்பு ரூ.45,200 கோடி, மின் உற்பத்தி ரூ.39,832 கோடி, இயற்கை எரிவாயு பைப்லைன் ரூ.24,462 கோடி, பைப்லைன் உற்பத்தி ரூ.22,504 கோடி, தொலைத்தொடர்பு ரூ.35,100 கோடி, கிடங்குகள் ரூ.28,900 கோடி, சுரங்கம் ரூ.28,747 கோடி, விமானப் போக்குவரத்து ரூ.20,782 கோடி, துறைமுகங்கள் ரூ.12,828 கோடி, விளையாட்டு அரங்குகள் ரூ.11,450 கோடி, நகர்ப்புற ரியல் எஸ்டேட் ரூ.15,000 கோடி. இவற்றில் முக்கிய 5 துறைகளின் கூட்டு மதிப்பு மட்டும் மொத்த திட்ட மதிப்பில் 85 விழுக்காடாக உள்ளது. இவற்றில் அதிகபட்சமாக சாலைகள் 27%., ரயில்வே 25%, மின் தொகுப்பு 15% பங்களிப்பை கொண்டுள்ளன.

மேற்கண்ட துறைகள் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும், பல ஆண்டுகளாக கடந்த கால அரசுகளால் ஏராளமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுகச் சிறுக வலுப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நிதி திரட்டல், பொருளாதாரத்தை வலுப்படுத்துவது என்ற பெயரில் தனியார் வசம் கொண்டு போய்ச் சேர்க்கும் நடவடிக்கையையே ஒன்றிய அரசு மேற்கொள்கிறது என்கிறார்கள், மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் பொருளாதார வல்லுநர்கள்.எதிர்க்கட்சியினர் இந்தத் திட்டத்தின் பாதகங்களை எடுத்துக் கூறியும், ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் உள்ளது.

பொதுவாகவே, இந்தத் திட்டத்தில் அடிமாட்டு விலைக்கு சொத்துகள் ஏலம் விடப்பட்டு அடகு வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, 741 கி.மீ நீளமுள்ள கொங்கன் தொடர்வண்டித்துறை வழித்தடம், மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், சந்தை மதிப்பை ஒப்பிடுகையில் அரசு இதன்மூலம் ஈட்டும் தொகை சிறிதளவுதான் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இதுவரை ஏற்படுத்தி வைக்கப்பட்ட கட்டமைப்புகளுடன் ஒப்பிடுகையில், இதனை தனியாரிடம் ஒப்புக்கு காசு வாங்கிக் கொண்டு சும்மா கொடுப்பதற்கு சமம் எனவும், ஏறக்குறைய பகல் கொள்ளை போலவே இது காணப்படுகிறது எனவும் சிலர் கவலையுடன் கருத்து தெரிவிக்கின்றனர். கடற்படைத் தளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை இணைப்பதாக கொங்கன் வழித்தடம் விளங்குகிறது.

இதேபோன்றுதான், ஒன்றிய அரசின் பணமாக்கும் திட்டம், மக்கள் நலன் சார்ந்த முக்கிய துறைகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் அடகு வைக்க படு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

மேலும், பிஎஸ்என்எல் வசம் உள்ள சுமார் 2.86 இலட்சம் கோடி பாரத்நெட் பைபர் நெட்வொர்க், 14,917 மொபைல் டவர்கள் அனைத்தும் தனியார் வசம் ஆகிவிட்டால், அது தனியாரின் ஏகபோக ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, போட்டியில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி பிஎஸ்என்எல்ஐ நிரந்தரமாக மூட வழி வகுப்பதாக அமைந்து விடும். இதன் மூலம் ரூ.35,100 கோடி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது. இது மொத்த இலக்கில் 6 விழுக்காடு.

இதுமட்டுமின்றி, பெரிய துறைமுகங்கள், கெயில் காஸ் பைப்லைன் ஆகியவையும் தனியார் வசம் போகிறது. இதில் பெரும்பான்மை ஏகபோக அனுபவ உரிமைதாரர்களாக அதானி, அம்பானிக்கள் ஆக வழிவகுக்கும் என மேற்கண்ட துறையினர் சிலர் கவலை தெரிவிக்கின்றனர். இப்படி ஒவ்வொரு துறையும் தனியார் வசம் ஆகும்போது, பொதுத்துறையாக இருப்பதால் மக்களுக்கு கிடைத்து வந்த பலன்கள் அனைத்தும் பாழாய்ப்போகும் அபாயம் உள்ளது. இது மக்கள் நலனுக்கு முற்றிலும் வேட்டு வைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் பணமாக்கும் திட்டத்தில், பொதுத்துறை நிறுவன சொத்துகளின் நிலங்கள் குத்தகைக்கு விடப்படுகின்றன. அதிலும், மெட்ரோ நகரங்களில் பொதுத்துறை நிறுவன சொத்துகள் மையப்பகுதிகளில் அமைந்துள்ளன.இவைதான் அந்த பகுதியின் நிலவிற்பனை விலையைக் கூட தீர்மானிக்கின்றன. ஆனால், இவற்றைக்கூட குறைந்த விலைக்கு தனியாரிடம் அடகு வைக்க முயல்வது எதற்காக என்ற கேள்விக்கு ஒன்றிய அரசிடம் இருந்து முறையான பதில் இல்லை.

அதுமட்டுமின்றி, குத்தகைக்கு விடப்படும் சொத்தின் மதிப்பை அரசு குறிப்பிட்டுள்ளது. குத்தகைக் கட்டணத்தை சொத்து மதிப்பு அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சொத்து மதிப்பு என்ன என்பதை அரசு தெளிவாக வரையறை செய்யவில்லை, ஏலத்தின் அடிப்படையிலேயே இது நிர்ணயிக்கப்பட உள்ளது.

எனவே, இது அரசு சொத்துகளை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்க வழி வகுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவை தொடர்பாக, எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மவுனம் சாதிக்கும் ஒன்றிய அரசு, இலாபகரமான துறைகள் அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்த பிறகு திரட்டக்கூடிய இவ்வளவு பெரிய தொகையை எதில் முதலீடு செய்யப்போகிறது?, எதற்காக இந்தத் தொகை?, கண்ணிரண்டையும் விற்று சித்திரம் வாங்கிய கதையாக, வளங்களையும், கட்டமைப்புகளையும் கொடுத்து விட்டு வரும் பணத்தை என்னதான் செய்யப்போகிறது? என்பதற்கான பதிலோ, வெளிப்படைத் தன்மை பற்றி எதுவுமோ கூறாதது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் மற்றொரு துறையாக, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகள் உள்ளன. இதில் இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகக் கட்டுப்பாட்டில் டெல்லியில் உள்ள ஓட்டல் அசோக், ஓட்டல் சாம்ராட், புதுச்சேரியில் உள்ள ஓட்டல் புதுச்சேரி அசோக் உட்பட 8 ஓட்டல்கள் அடங்கும்.

தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் ரூ.1,62,200 கோடி திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வடக்கு மண்டலத்தில் 1,361 கி.மீ, கிழக்கு மண்டலத்தில் 1,478 கி.மீ, மேற்கு மண்டலத்தில் 2,031 கி.மீ, தெற்கு மண்டலத்தில் 1,931 கி.மீ தனியாரிடம் ஏலம் மூலம் ஒப்படைக்கப்பட உள்ளன. இவ்வாறு தனியாரிடம் போவதால், சுங்கக் கட்டணங்கள் உயரும் அபாயம் உள்ளது. மேலும், இவ்வளவு கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி என்ற நிலை மாறி, இலாப நோக்கம் கருதி தனியார் சார்பில் கூடுதல் சுங்கச்சாவடிகள் ஏற்படுத்தப்படலாம். இவற்றின் கட்டண நிர்ணய அதிகாரம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், இஷ்டத்துக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

காஸ் பைப்லைன்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. இதில், பெட்ரோலியம், எல்பிஜி பைப்லைன்கள் ஆகியவையும் அடங்கும். மொத்தம் 3,930 கி.மீ தொலைவுக்கான பைப்லைன்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. இவற்றின் மூலம் ரூ.22,503 கோடி திரட்டப்பட உள்ளது. இது மொத்த பணமாக்கும் திட்ட இலக்கில் 4 விழுக்காடு.

இந்தியா முழுவதும் 17,432 கி.மீ.க்கு பெட்ரோலியம் மற்றும் காஸ் பைப்லைன்கள் உள்ளன. இதில் 43 பைப்லைன் திட்டங்கள் 14,063 கி.மீ.க்கு உள்ளது. பைப்லைன் திட்டங்களுக்கு விவசாயிகளிடம் நிலங்களை அடிமாட்டு விலைக்கு ஒன்றிய அரசு பறித்தது. இந்த நிலங்களில் தற்போது திட்டப்பணிகள் நடைபெறும் 554 கி.மீ பைப் லைன் திட்டங்களும் பணமாக்கும் திட்டத்தில் அடங்கும். இதனால், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல விவசாயிகள் தவிக்கின்றனர். இடத்தின் மதிப்புக்கு போதுமான இழப்பீடு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. சில விவசாயிகள் நாட்டுப்பற்றுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒன்றிய அரசு திட்டத்துக்கு நிலங்களை ஒப்படைத்தனர்.

விவசாய விரோத வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய ஒன்றிய பாஜ அரசு, நிலங்களுக்கு நியாயமான எந்த ஒரு இழப்பீடும் கிடைக்க வழி செய்யாததோடு, அர்ப்பணிக்கப்பட்ட நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து காசு பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்பது, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.

இதுபோல், 8,154 கி.மீ இயற்கை எரிவாயு பைப்லைன் தனியாரிடம் செல்கிறது. இதற்கான மதிப்பாக ரூ.24,462 கோடி என நிர்ணயித்துள்ளது. இதுவும், பணமாக்கும் திட்டத்தில் திரட்டும் தொகையில் 4 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் பெட்ரோலியத்தை விற்க ஒன்றிய அரசு கடந்த ஆண்டிலேயே தீவிரம் காட்டியது. பாரத் பெட்ரோலியத்தில் 4 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், 15,777 பெட்ரோல் நிலையங்கள், 6,011 காஸ் சிலிண்டர் மையங்கள், 51 காஸ் நிரப்பும் ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் அரசுக்கு 52.98% பங்குகள் உள்ளன. ஒன்றிய அரசு வைத்துள்ள பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.36,159 கோடி. தனியாருக்கு விற்கும்போது இதுவே அடிப்படை விலையாகக் கணக்கிடப்படலாம். ஆனால், இதுபோன்ற ஒரு நிறுவனத்தை மீண்டும் உருவாக்க வெளிச்சந்தை மதிப்பின்படி ரூ.9 இலட்சம் கோடி ஆகும். எனவே, இதை தனியார் மயம் ஆக்குவதால் அரசுக்கு ரூ.8 இலட்சம் கோடிக்கு மேல் நட்டம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் அப்போதே எச்சரித்தனர். ஆனால், ஒன்றிய அரசு இதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதேபோன்ற அவல நிலையைத்தான் அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு ஏற்படுத்தி விட்டது.

ஒன்றிய அரசின் பணமாக்கும் திட்டத்தில் 25 விமான நிலையங்கள் குத்தகைக்கு விட அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல் கட்டமாக நடப்பு நிதியாண்டில் 6 விமான நிலையங்கள் ஏலம் போகின்றன. இவற்றின் மொத்த மூலதன மதிப்பு ரூ.3,600 கோடி என ஒன்றிய அரசு மதிப்பீடு செய்துள்ளது. ஆனால், உண்மை மதிப்பு இதை விட பல மடங்கு இருக்கும் என்கின்றனர்.

இதில், தமிழகத்தில் திருச்சி விமான நிலையம் ஏலம் போகிறது. நிதியாண்டு வாரியாக குத்தகைக்கு விட தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்திலுள்ள விமான நிலையங்கள்.

ஆண்டு விமான நிலையம் தோராய மூலதன மதிப்பு
2021-22 திருச்சி ரூ.700 கோடி
2022-23 கோவை, மதுரை ரூ.500 கோடி, ரூ.694 கோடி
2023-24 சென்னை ரூ.2,800 கோடி

மொத்தம் திரட்டப்பட உள்ள ரூ.6 இலட்சம் கோடி, ஆண்டு வாரியாக திரட்டுவதற்கு ஒன்றிய பாஜ அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

நிதியாண்டு இலக்கு
2021-22 ரூ.88,190 கோடி
2022-23 ரூ.1,62,422 கோடி
2023-24 ரூ.1,79,544 கோடி
2024-25 ரூ.1,67,345 கோடி

* தமிழக நெடுஞ்சாலைகள்
சாலை நீளம்
தாம்பரம்-திண்டிவனம் 46.5 கி.மீ
திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை 73 கி.மீ
உளுந்தூர்பேட்டை-பாடலூர் 94 கி.மீ
பாடலூர்-திருச்சி 38 கி.மீ
திருச்சி-காரைக்குடி
(திருச்சி பைபாஸ் உட்பட) 117 கி.மீ
கிருஷ்ணகிரி-தொப்பூர் 63 கி.மீ
ஓசூர்-கிருஷ்ணகிரி 60 கி.மீ

நாடு முழுவதும் 9 பெரிய துறைமுகங்களில் உள்ள 31 திட்டங்கள் தனியார் வசம் போகப்போகின்றன. வ.உ.சி (தூத்துக்குடி) துறைமுகத்தில் மட்டும் 3 திட்டங்கள் தனியார் வசம் போகின்றன. இதன்படி நடப்பு நிதியாண்டில் 13 திட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் முறையே 10, 3 மற்றும் 5 திட்டங்கள் 2024-25 வரை
தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

* துறை வாரியாக இலக்கு
தேசிய நெடுஞ்சாலைகள்
ரூ.1,62,200 கோடி

தொடர்வண்டித்துறை
ரூ.1,52,496 கோடி

மின் தொகுப்பு
ரூ.45,200 கோடி

மின் உற்பத்தி
ரூ.39,832 கோடி

இயற்கை எரிவாயு பைப்லைன்
ரூ.24,462 கோடி

பைப்லைன் உற்பத்தி
ரூ.22,504 கோடி

தொலைத்தொடர்பு
ரூ.35,100 கோடி

கிடங்கு
ரூ.28,900 கோடி

சுரங்கம்
ரூ.28,747 கோடி

விமான போக்குவரத்து
ரூ.20,782 கோடி

துறைமுகங்கள்
ரூ.12,828 கோடி

விளையாட்டு அரங்கம்
ரூ.11,450 கோடி

நகர்புற ரியல் எஸ்டேட்
ரூ.15,000 கோடி

இவற்றில் முக்கிய 5 துறைகளின் கூட்டு மதிப்பு மட்டும் மொத்த திட்ட மதிப்பில்
85 விழுக்காடாக உள்ளது.

மின்தொகுப்புகளையும் தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி 28,608 சர்க்கியூட் கிலோ மீட்டர் மின் தொகுப்பை ரூ.45,200 கோடிக்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. பணமாக்கும் திட்டத்தில் இதன் சொத்து மதிப்பு மட்டும் 17 சதவீதம். அதுமட்டுமின்றி, மொத்தமாக திரட்டப்படும் திட்ட தொகையில் இது 8 சதவீதம். இதன்மூலம், மின்கட்டணம் உயரும் அபாயம் ஏற்படும். அதானியிடம் இதன் பெரும்பான்மை சொத்துக்கள் கைமாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வாங்கும் மாநிலங்கள் பாதிக்கப்படலாம். மானியத்தை மாநில அரசு ஏற்றால், பெரிய அளவில் நிதிச்சுமையில் தவிக்க வேண்டிய நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, நீர்மின் நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்கும் அதிர்ச்சிகரமான முடிவை ஒன்றிய அரசு மேற்கண்ட திட்டம் மூலம் செயல்படுத்த உள்ளது.

ஒன்றிய பாஜக அரசு 2014 ஆம் ஆண்டு அமைந்ததில் இருந்தே, பொதுத்துறையில் அரசு பங்குகளை விற்று தனியார் மயமாக்க பல்வேறு உத்திகளை வகுத்து வருகிறது.

முதல் 5 ஆண்டு ஆட்சியில் ஏர் இந்தியாவின் 76 விழுக்காடு பங்குகளை விற்பதாக அறிவித்தது. யாரும் முன்வராத நிலையில், 2 ஆவது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு மொத்த பங்குகளையும் விற்க மறுஅறிவிப்பு வெளியிட்டது. இலாபத்தில் இயங்கிய ஏர் இந்தியாவுடன், நட்டம் அடைந்த இந்தியன் ஏர்லைன்சையும் 2007 இல் சேர்த்த பிறகுதான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம், கன்டெய்னர் கார்ப்பேரேஷன், பவன் ஹன்ஸ், பாரத் பெட்ரோலியம் என அனைத்தையும் தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தற்போது ஒன்றிய அரசு வசம் உள்ள 439 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் 151 நிறுவனங்களை மூடி விடுவது அல்லது விற்பனை செய்து விடுவது என்ற முடிவுக்கு ஒன்றிய அரசின் புதிய தொழில் கொள்கையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Response