வ உ சி பிறந்தநாள் தமிழர் வணிக எழுச்சி நாள் – கோவையில் ததேபே சிறப்புக்கருத்தரங்கம்

“கப்பலோட்டிய தமிழர்” வ.உ. சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்தநாளை “தமிழர் வணிக எழுச்சி நாளாகக்” கடைபிடித்து, நாளை (05.09.2021) ஞாயிறன்று கோவையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

இக்கருத்தரங்கம் தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

கோவை தொடர்வண்டி நிலையம் எதிரிலுள்ள அண்ணாமலை அரங்கில், நாளை (2021 செப்டம்பர் 5) காலை 10 மணியளவில் நடைபெறும் தமிழ்ர் வணிக எழுச்சி நாள் நிகழ்வுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் தலைமை தாங்குகிறார். நிகர் கலைக்கூட நண்பர்கள் எழுச்சிப் பறையிசை முழங்க, த.தே.பே. சிங்காநல்லூர் செயலாளர் தோழர் தெள்ளியன் வரவேற்புரையாற்றுகிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்க ஈரோடு செயலாளர் தோழர் வெ. இளங்கோவன், திருப்பூர் செயலாளர் தோழர் ஸ்டீபன், அவிநாசி செயலாளர் தோழர் க. பிரசாந்த், பவானி செயலாளர் தோழர் நந்தக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். வ.உ.சி. குறித்த “சிதம்பர வேங்கை” நூல் அறிமுக நிகழ்வில், நூலாசிலரியர் திரு. கதிர்நம்பி பங்கேற்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்கில், வ.உ.சி. அவர்களின் பெயரன் திரு. மு.பா. தமிழ்வாணன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, எழுத்தாளர் – செயல்பாட்டாளர் திரு. சந்திரகுமார், ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான் (விஷ்வநாத்) ஆகியோர் கருத்துரை நிகழ்த்துகின்றனர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் நிறைவுரையாற்றுகிறார். தோழர் இராசேசுக் குமார் நன்றி கூறுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response