மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய ஒன்றியம் முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வாக ‘நீட்’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் – 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ல், 2018 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இந்த நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அகில இந்திய மருத்துவ குழும இடைநிலைக் கல்வி வாரியத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
தமிழ்நாட்டில் இதற்குக் கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும், இவ்வாண்டு மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 6 இலிருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 10 இரவு 11.50 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
ஒன்றிய அரசே! நீட் தேர்வை ரத்து செய்! என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சமூகநீதிப் பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
அதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
தமிழ்நாட்டில், தமிழ்மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக்கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுள்ள நீட்தேர்வு ஒட்டுமொத்தமாகச் சமூகநீதிக்கே எதிரானது.
மேலும் ஒன்றியம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் IAS, IPS, UPSC, CBSC, கேந்திரிய பள்ளித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தேர்வுகளையும் இரத்து செய்துள்ள ஒன்றிய அரசு நீட் தேர்வையும் இரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
சமூகநீதிப் பாதுகாப்புக் கூட்டியக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திராவிட செயற்பாட்டாளர் பெங்களூரு வா.புகழேந்தி, ஆதித்தமிழர் பேரவை கலையரசு, திராவிடத் தமிழர் கட்சி க.க.சங்கர், தமிழ்நாடு திராவிடர் கழகம் காசு.நாகராசன், புதிய குரல் கலையரசி, தாய்த் தமிழர் இயக்கம் க.பா.சீனிவாசன், திராவிடன் கோவை.பாபு முன்னிலை வகிக்க உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.