“பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது, எனக்கு ஏனோ அண்ணல் காந்தியாரின் நினைவு வந்தது. அதற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது!
வட நாட்டுப் பாட நூல்கள் சிலவற்றில், 1948 ஜனவரி 30 ஆம் நாள் காந்தியார் இறந்து போனார் என்று எழுதியிருக்கிறார்களாம். நாதுராம் கோட்சே என்னும் பார்ப்பனரால் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சொல்லிக் கொடுப்பதுதானே உண்மையான வரலாற்றுப் பாடமாக இருக்க முடியும்! மொட்டையாய் இறந்து போனார் என்று சொன்னால், அவர் ஏதோ காய்ச்சலிலோ அல்லது தற்கொலை செய்து கொண்டோ இறந்து போனார் என்பதாகத்தானே அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் நினைத்துக் கொள்வார்கள்! அப்படி நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தப் பாட நூலின் நோக்கமாக இருக்கலாம்.
இன்று காந்தியாரின் கொலை மறைக்கப்படுவதைப் போலத்தான், ஆயிரம் ஆண்டுகளாக ஆதித்த கரிகாலனின் கொலையும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அதனால்தான் எனக்குக் காந்தியார் நினைவு வந்தது.
கிபி 966 ஆம் ஆண்டு சோழ நாட்டின் இளவரசர் பட்டம் சூட்டப்பட்ட ஆதித்த கரிகாலன், மூன்றே ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டார். கடம்பூர் சம்புவராயர் அரண்மனையில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பது மிகத் தெளிவாக, அந்தக் காலகட்டத்தின் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் போன்ற பெருமக்கள், அந்தக் கொலையாளிகளின் பெயர்களைக் கூட, கல்வெட்டுகள், செப்பேடுகளில் இருந்து எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். உடையார் குடிச் செப்பேடு, இறைபுத்தூர்க் கல்வெட்டு, திருவாலங்காட்டுக் செப்பேடுகள் ஆகியவை சான்றுகளாகக் காட்டப்பட்டுள்ளன!
சோமன் என்னும் பார்ப்பனனும் அவன் உடன் பிறந்த மூன்று தம்பிகளும்தான், அந்தக் கொலையைச் செய்தவர்கள் என்பது வரலாற்று ஆவணங்கள் தரும் குறிப்பு. அவர்களுள், பிரம்மாதிராயர் பட்டம் பெற்ற ஒருவர் சோழ நாட்டிலும், இன்னொருவர் பாண்டிய நாட்டிலும் அதிகாரிகளாக இருந்துள்ளனர். அன்றைய சோழ சாம்ராஜ்யத்தில், மன்னர்களை, பட்டத்து இளவரசர்களைக் கூட மிக நெருக்கமாக அணுகிப் பேசக்கூடிய சூழல் பார்ப்பன அதிகாரிகளுக்குத்தான் இருந்துள்ளது என்பது வெளிப்படை. அதனால்தான் அவர்களால் ஒரு பட்டத்து இளவரசனை எளிதாகக் கொலை செய்ய முடிந்திருக்கிறது!
ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு ஏன் வந்தது, பின்னணியில் யாரேனும் இருந்தார்களா, அதற்கான உள்நோக்கம் என்ன என்பன போன்ற ஆயிரம் கேள்விகள், வரலாற்றில் இன்றும் அவிழாமலேயே இருக்கின்றன!
அந்தக் கொலையால் பயன் பெற்று, அடுத்துப் பட்டத்துக்கு வரக்கூடிய மதுராந்தகன் பின்னணியில் இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். அருண்மொழியும் (ராஜராஜன்), குந்தவையுமே கூட அப்படி ஒரு திட்டத்தைத் தீட்டி இருக்க கூடும் என்ற ஐயமும் வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளது. பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள்தான் இந்த கொலையைப் பின்னால் இருந்து இயக்கி இருக்கக்கூடும் என்பதாகவும் ஒரு கருத்து உண்டு.
இவை எல்லாவற்றையுமே கல்கி தன் நாவலில் சாதுரியமாக மறைத்து விட்டார்! நாவலைப் படிப்பவர்கள் நெஞ்சில் நந்தினிதான் அந்தக் கொலையைச் செய்திருக்க கூடும் என்ற எண்ணம் எழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கினார். இதில் என்ன வேடிக்கை என்றால், நந்தினி என்பது வரலாற்றில் இல்லவே இல்லாத, கல்கியின் கற்பனைப் பாத்திரம். இல்லாத நந்தினிக்கு, மந்தாகினி என்று ஒரு தாய் வேறு வந்து போகிறார்! அவர் சோழனின் காதலியாகவும், வீரபாண்டியனின் மனைவியாகவும் காட்டப்படுகிறார். ஆகவே, நந்தினி வீரபாண்டியனின் மகள் என்றாகி விடுகிறது. கதையில் சுவை கூட்ட இவையெல்லாம் பயன்படலாம். ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இவற்றில் ஒரு துளி உண்மையும் இல்லை!
எப்படியோ ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதைக் கல்கி மறைத்து விட்டார். வெள்ளையாய் இருப்பவர்கள் பொய் சொல்வார்களா என்பது போல, பார்ப்பனர்கள் கொலை செய்வார்களா என்று சிலர் கேட்கக்கூடும்! மௌரிய சாம்ராஜ்யத்தை வீழ்த்தி சுங்க வம்சத்தை தோற்றுவித்த புஷ்யமித்ரன், மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய பார்ப்பனன்தானே! எனவே இது வரலாற்றில் ஒன்றும் புதிய தில்லை!
சரி. திரைப்படத்திலாவது உண்மை சொல்லி இருப்பார்களா என்று பார்க்கப் போனால், மணிரத்தினமும், ஜெயமோகனும் சேர்ந்து, கல்கியே பரவாயில்லை என்று ஆக்கிவிட்டார்கள். அந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வருகிறவர்களிடம், ஆதித்த கரிகாலனை யார் கொலை செய்தார்கள் என்று கேட்டு பாருங்கள். எந்த ஒரு வில்லாதி வில்லனாலும் அதற்கு விடை சொல்ல முடியாது. நந்தினிதான் இல்லை இல்லை, இல்லை பாண்டியர்கள்தான் அல்லது பழுவேட்டரையர், அல்லது வந்தியததேவன் என்று யாரோ ஒருவர் கொலை செய்து விட்டார்கள் அல்லது கரிகாலன் தானே தற்கொலை செய்து கொண்டு விட்டான் என்றுதான் சொல்வார்கள்! காரணம் யாருக்கும் எதுவும் புரிந்து விடாதபடி அந்தத் காட்சி அப்படிப் படமாக்கப்பட்டு இருக்கிறது.
அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு, கல்வி எல்லாம் சேர்ந்து இன்றைக்கும் பார்ப்பனர்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பதை பாருங்கள்!
அன்புன்
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை