ஆகஸ்ட் 2,2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் படத்திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில்,ஒன்றிய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு,கலைஞர் மு.கருணாநிதியின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..
வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க நாள் இது. தமிழக, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்குக் குடியரசுத் தலைவர் வருகை தந்திருக்கிறார். அவர் பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்காக வாதாடுவதில், போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும் அதனை ஏற்காமல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சமூக நீதியைத் தன் வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இத்தனை பெருமைக்குரிய அவர், நம் தமிழக சட்டப்பேரவைக்கு வந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும்.
தமிழக சட்டப்பேரவை பல முன்னோடி சட்டங்களை இயற்றி, சமதர்ம சமூகத்தை உருவாக்கிட வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. 1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அந்நாளைய மாகாண சட்டப்பேரவைகளில் இடம்பெறத் தொடங்கினர். அச்சட்டமே பின் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைந்திட வழிவகுத்தது.
அச்சட்டத்தின்படி, சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு 1920 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் தலைமகனான நீதிக்கட்சி வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. 1921 ஆம் ஆண்டு கனாட் கோமகனால் முதல் மாகாண சுயாட்சி, சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டதன் பவளவிழா நிகழ்ச்சியும், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்கீழ் முதன்முதலாக, 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாண சட்டமன்றத்தின் வைரவிழா நிகழ்ச்சியும், 1997 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் தலைமையில் தமிழக அரசால், சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதலாக மகளிருக்கு வாக்குரிமை அளித்த பெருமை சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு உண்டு. தேவதாசி ஒழிப்புச் சட்டம், மகளிருக்கு உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு, பெண் குழந்தைகளைக் காக்க சிறப்புத் திட்டம் என, பெண்களுக்காக நாட்டுக்கே முன்னோடி திட்டங்களை உருவாக்கிய பெருமைகொண்டது.
சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர்சூட்டிய தீர்மானம், சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது, நிலச் சீர்திருத்தச் சட்டம், மே 1 அரசு விடுமுறை, மாநில சுயாட்சிக்கான தீர்மானம், பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்திட சட்டம் இயற்றியது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என, பார் போற்றும் சட்டங்கள் இங்கு இயற்றப்பட்டன.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நிறுவப்பட்ட மாபெரும் வளாகம் இது. அரசு முத்திரையில் வாய்மையே வெல்லும் என தமிழ் மொழி அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள், ஏழை, எளியவர்கள், என, விளிம்புநிலை மக்களின் நலன் காக்க இந்தச் சட்டப்பேரவை தொடர்ந்து செயலாற்றி வருகிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தச் சட்டப்பேரவையில் செயலாற்றிய கலைஞரின் உருவப் படத்தைத் திறந்திருப்பது அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. 1957 இல், தனது கன்னிப் பேச்சில் விவசாயிகள் பிரச்சினையைப் பேசி கவனம் ஈர்த்தவர் கலைஞர். முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி அனைவரின் அன்பையும் பெற்றவர். சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவர். மண்டல் ஆணையப் பரிந்துரைகளைச் செயல்படுத்தத் தீர்மானம் கொண்டுவந்தவர்.
காவிரி நடுவர் மன்றத் தீர்மானம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம், நுழைவுத்தேர்வுகளை ஒழிக்கக்கூடிய சட்டம் எனப் பல்வேறு புரட்சிகர சட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர்.
அவருடைய திருவுருவப் படத்தைப் பார்க்கும்போது சர்.பி.டி.தியாகராயர், டி.எம்.நாயர், நடேசனார் தொடங்கி, க.அன்பழகன் வரையிலான மாபெரும் தலைவர்களின் முகங்களைக் காண்கிறேன். இன்னும் முன்னால் இருந்து நம்மை வழிநடத்தும் தலைவராக அவரைப் பார்க்கிறேன். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், தமிழன்னையின் தலைமகனான கலைஞரின் உருவப் படத்தைத் திறந்து வைத்திருப்பதை எண்ணி, தமிழக முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று கலைஞர் மு.கருணாநிதி படத்தைத் திறந்து வைத்த ஒன்ரிய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தனது விழாப்பேருரையின் தொடக்கத்தில்,‘‘இன்றைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பதில்மகிழ்ச்சி அடைகிறேன். உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்கநாள்’’ என்று தமிழில் பேசினார். ‘மந்திரம் கற்போம் வினைத் தந்திரம்கற்போம், வானையளப்போம், கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம், சந்தித்தெரு பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்று பாரதியின் கவிதைகளையும் தமிழில் வாசித்தார்.
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா,கலைஞர் மு.கருணாநிதி படத்திறப்பு விழா ஆகிய இரண்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விழாவை அதிமுக புறக்கணித்துவிட்டது. இருப்பினும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, தமாகா கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதனால், இந்நிகழ்வின் மூலம் அதிமுக தனிமைப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.