சி.வி.சண்முகம் கருத்துக்கு எதிராகப் பதிவிட்ட ஓபிஎஸ் -அதிமுகவில் பரபரப்பு

மேற்கு வானூர் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று மாலை, முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம் பேசும்போது,

பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம்.பொதுவாகவே, கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டுசென்ற காரணத்தினால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால், கணக்கு சரியில்லை. கூட்டணிக் கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜகவினர் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர்.

எங்கள் கட்சித் தொண்டர்கள்கூட தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று நினைக்கின்றனர். அதேபோல அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளைச் சொல்ல முடியும். இது அதிமுகவின் தலைமை முடிவா என்று பார்க்கவேண்டும். இதுகுறித்துப் பழனிசாமி, பன்னீர் செல்வம் கருத்துத் தெரிவிக்கும்போது பாஜக இதற்கு பதில் சொல்லும். பாஜகவுக்கு எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.

சிறுபான்மை மக்கள் வாழும் ஜம்மு – காஷ்மீரில் 25 எம்.பி.க்கள் வெற்றிபெற்றுள்ளனர். அரசியல் தெரிந்தவர்கள் இப்படிக் குற்றம் சாட்டமாட்டார்கள். இவர் தோற்றதற்கு பாஜகவைக் குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்துத் தேதி அறிவித்த பின்பு மத்திய, மாநிலத் தலைமை முடிவெடுக்கும்

என்று கே.டி.ராகவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

பாஜக மீதும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் “அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்”. இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

என்று பதிவிட்டிருக்கிறார்.

அந்த ட்வீட்டில், பிரதம்ர் மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் ஆகியோரை இணைத்திருக்கிறார்,

நேற்று சி.வி.சண்முகம் பேசியதற்கு நேரெதிராக ஓபிஎஸ் சொல்லியிருப்பது அதிமுக உட்கட்சி மோதலை வெளிப்படுத்துவதாக உள்ளது என்பதால் அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Response