கொலை மிரட்டல் விடுக்கும் ஜக்கி – அஞ்சாமல் போராடும் பெ.மணியரசன்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் 18.04.2021 – ஞாயிறு அன்று பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர கி.வெங்கட்ராமன், பொருளாளர் அ.ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.அருணபாரதி, நா.வைகறை, பழ.இராசேந்திரன், இரெ.இராசு, க.முருகன், கோ.மாரிமுத்து, தை.செயபால், ம.இலட்சுமி, மு.தமிழ்மணி, வே.க.இலக்குவன், முழுநிலவன், பி.தென்னவன், மா.மணிமாறன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இரெ.கருணாநிதி, இலெ.இராமசாமி, சிதம்பரம் இரா.எல்லாளன், புதுச்சேரி இரா.வேல்சாமி, சீர்காழி செ.அரவிந்தன், திருச்சி மூ.த.கவித்துவன், குடந்தை தீந்தமிழன், மதுரை கதிர்நிலவன், பே.மேரி, புளியங்குடி க.பாண்டியன், மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் செம்மலர், திருத்துறைப்பூண்டி ப.சிவவடிவேலு, ஓசூர் முருகப்பெருமாள், காட்டுமன்னார்கோயில் சிவ.அருளமுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்!

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரிப் பகுதியில் மலை வளத்தை அழித்தும், கானுயிர்கள் நாடமாடும் மலைப் பாதைகளை கட்டடங்களாக்கியும், பழங்குடி மக்களின் வாழ்விடங்களைப் பறித்தும், மிக விரிந்த நிலப்பரப்பில் ஈஷா மையக் கட்டடங்களை எழுப்பியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.

தமிழ்நாடு அரசு மலைவளப் பாதுகாப்புக் குழுவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஜக்கி வாசுதேவின் இந்த இயற்கை அழிப்பு வேலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதை சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை அளித்திருக்கிறது.

இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (Report of the Comptroller and Auditor General of India on Economic Sector for the year ended March 2017 (Government of Tamil Nadu – Report No. 7 of the year 2017) Page 32, Para 2.8.5.1), ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதன் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை கண்டித்துள்ளது.

தியான லிங்கம் கோயில், ஆதியோகி சிலை ஆகியவை தமிழர் சிவநெறி மரபுக்கும், ஆகமங்களுக்கும் முரணான வகையில் எதேச்சாதிகாரமாக நிறுவப்பட்டுள்ளன.

ஈஷா மையத்திற்கு வரும் பக்தர்களின் ஆதரவு, தமக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தம்மை தமிழ்நாட்டின் ஒற்றை ஆன்மிகத் தலைவராக நிறுவிக் கொள்ள தவறான வழிகளைக் கையாள்கிறார் ஜக்கி வாசுதேவ்.

தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டியத் தண்ணீரை கர்நாடகம் தர மறுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் கர்நாடகத்தை நோக்கி தங்களுக்கு உரிமையுள்ள காவிரி நீரை கேட்காமல் தடுக்கும் நோக்கத்துடன், “காவிரிக் கூக்குரல்” என்ற மரம்நடும் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரவலாக நடத்தினார். காவிரியின் இரு கரைகளிலும் மரம் நட்டால் பன்னிரெண்டு மாதங்களும் காவிரியில் தண்ணீர் ஓடும் என்று ஒரு பொய்யைப் பரப்பினார். காவிரி நீரை கர்நாடகத்திடம் கேட்காமல், தமிழ் மக்களை மடைமாற்றும் சூழ்ச்சித் திட்டம் இது!

இந்த “காவிரிக் கூக்குரல்” சூழ்ச்சித் திட்டத்தில் ஊழல் செய்து, 10,061 கோடி ரூபாய் திரட்டியுள்ளார் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. (Writ Petition No 43414 / 2019 (GM – PIL)). கர்நாடக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே அந்த அரசின் இலட்சினையைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டினார் என்பது ஒரு குற்றச்சாட்டு! கர்நாடக அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜக்கியின் “காவிரி கூக்குரல்” மரம் நடும் திட்டத்திற்கும், மாநில அரசுக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்றும், ஒரு செண்ட் நிலம் கூட இந்த மரம்நடும் நிகழ்வுக்கு கர்நாடக அரசு தரவில்லை என்றும் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு, தமிழ்நாட்டு சிவநெறி ஆன்மிக மரபுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டும், மலைவாழ் மக்கள் மற்றும் கானுயிர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிலங்களை ஆக்கிரமித்தும் “தனி அரசு” நடத்திக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ் இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள இந்து அறநிலையத்துறையைக் கலைக்க வேண்டுமென்று கோயில்களுக்குள் போராட்டம் நடத்தி வருகிறார்.

நூறாண்டு கால வரலாறு கொண்ட இந்து அறநிலையத்துறையின் பொறுப்பில் 44,121 இந்துக் கோயில்கள் செயல்படுகின்றன. அவற்றில் 11,999 கோயில்கள் மூடிக் கிடப்பதாக ஜக்கி வாசுதேவ் சொல்கிறார். உண்மை என்னவெனில், இந்தக் கோயில்களில் வருமானம் போத வில்லை என்ற குறைபாடு இருக்கிறதே தவிர, கோயில்கள் மூடிக் கிடக்கவில்லை. வருமானம் குறைவாக உள்ள கோயில்களிலும் கட்டாயம் ஒருநாளைக்கு ஒரு கால பூசையாவது செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் பூசைகள் நடந்து வருகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்காக ஜக்கி வாசுதேவ் கூறுவதுபோல், அந்தத் துறையைக் கலைத்துவிட்டு இந்துக் கோயில்களை தனிநபர்களிடம் ஒப்படைத்தால் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் ஆன்மிக ஏகபோகவாதிகளிடமும், வர்ணாசிரம ஆதிக்கவாதி களிடமும்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் போய்ச் சேரும்.

எனவே, ஜக்கி வாசுதேவின் இந்து அறநிலையத்துறைக் கலைப்புக் கோரிக்கையை மறுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும்.

அத்துடன், சட்டவிரோதமாகச் செயல்படும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கி, இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 2 :

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழி பூசையும்,

குடமுழுக்கும் நடைபெற வேண்டும்!

தமிழ்நாடு அரசு தமிழ்வழியில் கருவறை அர்ச்சனை செய்வதற்கும், குடமுழுக்கு நடத்துவதற்கும் தமிழ் மந்திரங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. தமிழ்வழி அர்ச்சர்களை உருவாக்க பயிற்சிக் கல்வி நிலையங்களை நடத்தி, இருநூறுக்கும் மேற்பட்ட அர்ச்கர்களுக்கு சான்றிதழும் வழங்கியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பணி வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழியில் கருவறை பூசையும், குடமுழுக்கும் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு அனைத்துக் கோயில்களிலும் உறுதி செய்ய வேண்டும். சமற்கிருதத்தில் அர்ச்சனை கோருவோருக்கு மட்டுமே அம்மொழியில் பூசை நடத்த வேண்டும். மற்றபடி வழக்கமாக, தமிழில் மட்டுமே பூசைகள் நடப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

தீர்மானம் 3 :

மே 8 – உண்ணாப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்பீர்!

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழியில் பூசையும் குடமுழுக்கும் நடத்திட வலியுறுத்தியும், இந்து அறநிலையத்துறையைக் கலைத்திடக் கோரும் ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை மறுத்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வரும் 08.05.2021 – சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை – தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெறும் உண்ணாப் போராட்டத்தில் ஆன்மிகச் சான்றோர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தீர்மானம் 4 :

த.தே.பே. தலைவர் பெ. மணியரசன் அவர்களைத்

தாக்கத் திட்டமிடும் நபர்களைக் கைது செய்க!

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கி, அங்குள்ள தியான லிங்க சாமி கோயில், ஆதியோகி கோயில் அனைத்தையும் இந்து சமய அறநிலையத் துறையில் சேர்க்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் 13.04.2021 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கூறினார்.

இதனால் ஆத்திரப்பட்ட ஜக்கிவாசுதேவ் அமைப்பைச் சேர்ந்தவர்ககளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் தொலைப்பேசியில் வன்முறை மிரட்டல் விடுகிறார்கள்.

மேலும், பெ.ம. அவர்களின் வீடு எங்கே இருக்கிறது என்று ஒருவர் சுட்டுரையில் (ட்விட்டரில்) கேட்க மற்ற இருவர் அவர் வீடு இருக்கும் முகவரிகளைத் தந்துள்ளார். தோழர் பெ. மணியரசன் அவர்களை வீடு புகுந்து தாக்கும் உள்நோக்கத்துடன் இவ்வாறு வீட்டு முகவரியை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை கோரியும் பாதுகாப்புச் கோரியும் பெ. மணியரசன் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் 16.04.2021 இரவு புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தமிழ்நாடு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறது!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response