சென்னையில் வெப்பம் அதிகரிப்பு அனல்காற்று வீசுகிறது – வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு, வழக்கத்தைக் காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகத்தை நோக்கி வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும், 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வேட்பாளர்கள் பரப்புரை மற்றும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதால் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Response