ஓபிஎஸ் மீது சாணி வீச்சு – பரப்புரை பாதியில் முடிந்தது

தேனி மாவட்டம், போடி தொகுதி அதிமுக வேட்பாளர், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே போடியில் வஉசி சிலை திறப்பின்போது, ஒரு பிரிவினர் அவரை எதிர்த்து ‘‘ஒழிக’’ என்று முழக்கமிட்டு அதிருப்தியை தெரிவித்தனர்.

10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரச்னையில் சீர்மரபினர் அமைப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் போடி, குயவர்பாளையம் பகுதியில் சமுதாயக்கூடத்தில் வாக்கு சேகரித்தபோது, பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக ஒரு சமூகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் அவரையும், அவரது 2 ஆவது மகன் ஜெயபிரதீப்பையும் சிறை வைத்து முற்றுகையிட்டனர். இருவரையும் காவல்துறையினர் மீட்டனர்.

போடி தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்திற்கு வாக்கு சேகரிக்க நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் சென்ற ஓபிஎஸ், கெஞ்சம்பட்டி பிரிவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெட்டிக்கடைபின்புறம் மறைந்திருந்த ஒருவர், திடீரென ‘‘10 ஆண்டாக எதுவும் செய்யவில்லை’’ என கூச்சலிட்டவாறே, கையில் வைத்திருந்த சாணத்தை ஓபிஎஸ் மீது வீசினார். ஆனால், சாணம் ஓபிஎஸ் மீது விழாமல், அவருக்குப் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் மீது விழுந்தது.உடனே, காவல்துறையினர் சாணம் வீசிய நபரை துரத்திப் பிடித்து, போடி புறநகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் பரப்புரையைப் பாதியில் முடித்துவிட்டுக் கிளம்பினார்.

விசாரணையில், ஓபிஎஸ் மீது சாணம் வீசியவர் நாகலாபுரம் அருகே கெஞ்சம்பட்டியைச் சேர்ந்த முருகன், அதிமுகவைச் சேர்ந்தவர் என்றும், நாகலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் காளிதாஸின் உறவினர் என்றும் தெரிய வந்தது. தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக நாகலாபுரத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியில் சாணத்தை வீசியதாகத் தெரிய வந்துள்ளது. போடி தொகுதியில் செல்லும் இடமெல்லாம் ஓபிஎஸ்சுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அதிமுகவைச் சேர்ந்தவரே சாணம் வீசியது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response