கமலின் சதியை அம்பலப்படுத்தும் தயாநிதிமாறன்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து தயாநிதி மாறன் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது…..

தொண்டாமுத்தூரில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. தொண்டாமுத்துரைப் பொறுத்தவரை அதிமுக, பாஜக, பாமக, ’ஏ’ டீம், கமல் ’பி’ டீம், சீமான் ’சி’ டீம். எப்படி என்று கேட்கிறீர்களா? இதற்குச் சான்றாக மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் போட்டி, மக்கள் நிதி மய்யம் வேட்பாளர் மாற்றம் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம் .

கமல்ஹாசன் முதலில் தொண்டாமுத்தூருக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தார். பின்னர் திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதியை அறிவித்த பிறகு ஹாஜகான் என்ற இஸ்லாமிய நண்பரை வேட்பாளராக அவர் அறிவிக்கிறார். இதன் பின்னணியில் வேலுமணி உள்ளார். வேலுமணிதான் கமலுக்குப் பணப் பட்டுவாடா செய்கிறார். ஏனெனில் பாஜகவின் ’பி’ டீம் கமல்.

அதுமட்டுமல்லாது சிறுபான்மையினர் ஓட்டைப் பிரிப்பதற்காக சென்னையைச் சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் போட்டியிடுகிறார். சிறுபான்மையினர் ஓட்டுகளைச் சிதறச் செய்தால் அவர்கள் வந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இந்து, முஸ்லிம்களைப் பிரிக்க வெறுப்பு அரசியலைச் செய்து இந்துக்களின் ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். சிறுபான்மையினரை ஒடுக்க நினைத்தால் அதற்கு எதிராக மு.க. ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார்.

இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

Leave a Response