கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான் அண்மையில், தமிழ் தேசியப் புலிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், இந்தக் கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
மன்சூர்அலிகானுக்கும் தொண்டாமுத்தூருக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மை வேறு.
தொண்டாமுத்தூர் தொகுதி முஸ்லீம் ஓட்டுகள் அதிகம் உள்ள தொகுதி. இந்த வாக்குகள் பெரும்பாலும் அதிமுக, பாசகவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.அந்த ஓட்டுகள் திமுகவுக்குச் சென்றுவிடாமல் தடுக்க மன்சூர் பயன்படுவார் என்றும் தொண்டாமுத்தூர் பகுதியைத் தேடி வந்ததற்கு அதிமுக வுக்காக முஸ்லீம் ஓட்டுகளைப் பிரிப்பதுதான் நோக்கமாக இருக்க முடியும் என்கிறார்கள்.
அமைச்சர் வேலுமணி எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதற்காக மன்சூரை இங்கு போட்டியிடவைத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
கடந்த சில நாள்காக கோவை தொண்டாமுத்தூரில் முகாமிட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார் மன்சூர் அலிகான்.
வேட்புமனுக்களைத் திரும்பப்பெற இன்று கடைசி நாள். ஆனால் நேற்றே போட்டியிலிருந்து விலகிவிட்டார் மன்சூர் அலிகான்.
இதுதொடர்பாக குரல்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கு பரப்புரைக்குச் சென்றாலும், பாய் எவ்வளவு காசு வாங்குனீங்க, பாய் ஓட்டையெல்லாம் பிரிக்க வேலுமணிகிட்ட பணம் வாங்கிட்டீங்களாமே? என்று கேட்கிறார்கள்.எங்கு போனாலும் ஒருமாதிரி பார்க்கிறார்கள். இதெல்லாம் எனக்கு ரொம்பப் புதுசு.வருத்தமா இருக்கு அதனால் அங்கு போட்டியிலிருந்து விலகிவிட்டேன். சிலர் பரப்புரைக்குக் கூப்பிடுகிறார்கள். வாய்ப்பிருந்தால் போவேன் என்று சொல்லியிருக்கிறார்.