கோவையில் நடந்த சோதனைகள் – எடப்பாடி பழனிச்சாமிக்குச் சிக்கல்?

எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமான நண்பர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்ரமணியம் கோவையில் வசிக்கிறார்.
அஸ்வின் பேப்பர் மில்ஸ் அதிபரான இவரது அலுவலகம், கோவை சிவானந்தா காலனியில் உள்ளது. இங்கு 22 ஆம் தேதி முதல் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை அதிகாரிகளுடன் இணைந்து இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வரி ஏய்ப்பு செய்துள்ளனரா, முறையாக வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா என ஆவணங்கள் மற்றும் கணினியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இரவு, பகலாக தொடர்ந்த இந்த சோதனை 5 நாட்கள் நடந்து, 26 ஆம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது.

இதுதவிர, கோவையைச் சேர்ந்த லட்சுமி டூல்ஸ் நிறுவன உரிமையாளர் வரதராஜன், அவரது மகன்கள் பொன்னுத்துரை, பார்த்திபன், செந்தில்குமார் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரதராஜன் தொடர்புடைய இடங்களான துடியலூர், ராவுத்தர் பிரிவு, செலக்கரிச்சல், கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சிந்தாமணிபுதூர் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையும் 5 நாட்களில் நிறைவடைந்தது. கோவையில் இருவருக்கும் சொந்தமான பல இடங்களில் கடந்த 5 நாட்கள் நடந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றதாக தகவல் வெளியானது.

ஆனால் சோதனையின் முழு விவரத்தை வருமானத்துறையினர் வெளியிடாமல் இரகசியமாக முடித்து சென்றிருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாரிகள் அதன் தகவல்களை வெளியிட்டனர்.

அதன்படி கோவையில் நடந்த ரெய்டில் ரூ.42 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் இளங்கோவனுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் கல்லூரிகளிலும் வருமான வரி சோதனை நடந்ததல்லவா?. அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பிடிபட்ட பணம் யாருடையது, அதிமுக கட்சியின் அல்லது எடப்பாடி ப்ழனிச்சாமியின் பினாமி பணமாக இருக்கலாமா என்ற கோணத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மேலும் சில அதிமுக பிரமுகர்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் கோவை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Leave a Response