தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில்,திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

1) தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை !

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி- மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் – சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை எடுப்பையே நடத்தி வருகிறது.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ்நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கிவிட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம் ;

இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் வகையில் துணை நின்று வருகிறது. தங்கள் கட்சியின் தலைவர்களாக இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பின்பற்றிய மாநில உரிமைக் கொள்கைகளுக்குக் கூட இது மகத்தான துரோகம் ஆகும்.

இந்த ஆபத்திலிருந்த தமிழ்நாட்டையும் தமிழர்களையும் மீட்பதற்கு தற்போதைய சூழலில் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திமுகவும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மட்டுமே என்று, தேர்தல் அரசியலில் ஈடுபடாத, சமுதாய மாற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியாகக் கருதுகிறது.

சூழ்ந்து நிற்கும் ஆபத்துகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்துக்கொள்ளவும் எதிர்காலத்தில் மதவெறி மனுவாத சக்திகளின் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடவும், மக்களிடையே கருத்துருவாக்கம் செய்யவும், ஒரு பொது வெளி தேவைப்படுகிறது ! சமூக மாற்றத்துக்கான பெரியார் சிந்தனைகளைப் பேசுவதும், எழுதுவதும், பரப்புவதும் கூட தேசத்துரோகம் என்று மதவாத சக்திகள் மிரட்டி அதற்கு அஇஅதிமுக ஆட்சியைப் பணிய வைத்து வருகின்றன. கருத்துரிமை முற்றாகப் பறிக்கப்பட்டு வருகிறது. இந்த அடக்குமுறைகளைத் தகர்க்க வேண்டியது தற்போதைய சூழலில் முதன்மையான பணி என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருதுகிறது.

இந்தப் பார்வையோடு பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடித்து திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் குவிக்குமாறு தமிழ்நாட்டு மக்களை திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response