முகத்துக்கு நேரே ஒழிக என்று முழக்கமிட்ட பெண்கள் – அதிர்ந்து போன ஓபிஎஸ்

தேனி மாவட்டம், போடி, பழைய பேருந்து நிலையம் அருகே வ.உ.சி. சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவில் துணை முதல்வரும், போடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் சமுதாயக்கொடியை ஏற்றி வைத்த ஓ.பன்னீர்செல்வம், பின்னர் வ.உ.சி. சிலையை திறந்து வைத்து விட்டு மேடையில் சென்று அமர்ந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த மதுரையைச் சேர்ந்த டிரைவர் ஒருவரின் மனைவி உட்பட 2 பெண்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் மேடை மீது ஏறினர்.

ஓபிஎஸ்சை பார்த்து, ‘‘ஓபிஎஸ் ஒழிக… ஓபிஎஸ் ஒழிக…’’ என கோஷமிட்டனர். மேலும், ‘‘எங்களது பெயரை மற்ற சமுதாயத்திற்கு தாரை வார்த்துக் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், உங்களுக்கும் என்ன உரிமை இருக்கிறது?’’ என கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். அப்போது சிலர் நாற்காலிகளை தூக்கி வீசியடித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் முழக்கமிட்ட 2 பெண்கள் மற்றும் வாலிபர்களை காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கி இழுத்துச் சென்றனர். அவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.

துணை முதல்வர் ஓபிஎஸ் முன்பே அவருக்கு எதிராக மேடையில் ஏறி பெண்கள் முழக்கமிட்டதும், அவர்களைக் காவல்துறையினர் தாக்கியதும் போடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response