நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது – தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை இரத்து செய்யக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. இதில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதில்,

நியூட்ரினோ திட்டம் அமைவிடமானது உலக அளவில் உயிர்ப் பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மேற்கு மலையாகும்.

இந்த போடி மேற்கு மலையானது புலிகள் வசிக்கக் கூடிய மேகமலை திருவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்குகிறது. இந்த இணைப்புப் பகுதி புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்கும் அவற்றின் இனப்பெருக்கப் பரவலுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும். மேலும் இந்த மலைப் பகுதியானது வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாக விளங்குகிறது. எனவே, நியூட்ரினோ திட்டத்தை மேற்கு மலையில் அமைக்க அனுமதிக்க முடியாது

இவ்வாறு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Response