நாளை சென்னை வருகிறார் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா சனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அவர் நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமமுக கட்சியினர் செய்து வருகின்றனர். சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் எனத் தெரியவில்லை. ச‌சிகலா வருகையை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க அதிமுக முயற்சி செய்கிறது என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…..

சசிகலா வருகையால் எங்களுக்குப் பயம் என்றால் என்னவென்றே தெரியாது. நாங்கள், அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா என வளர்க்கப்பட்டவர்கள்.

அதிமுகவினருக்கு அச்சம் என்பதே தெரியாது. வெளியே வந்தபின் சசிகலா, தினகரனிடம் கணக்குக் கேட்பார் என்பதால் அவர்தான் பதற்றத்தில் இருக்கிறார். அதிமுக கட்சிக் கொடியைப் பயன்படுத்த சசிகலாவிற்கு அனுமதியில்லை. மீறி பயன்படுத்தினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

சசிகலா குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பது தான் நோக்கம். திமுகவின் ‘பி’ டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எங்களோடுதான் கடைசி வரை இருப்பார். அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் அதிமுக. சில புல்லுருவிகள் செயலால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சிகலா

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று நாளேடுகளில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்திருந்த விளம்பரங்களில், ஒருவருக்கு முதலமைச்சர் அரியாசனத்தை வழங்கிவிட்டு மீண்டும் அது திரும்பப் பெறப்பட்டதாக வரலாறே இல்லை.அந்தப் புதிய வரலாற்றைப் படைத்துக் காட்டியவர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் என்று ஜெயலலிதா சொன்னதைப் பெரிதாகப் போட்டிருந்தார்.

இது சசிகலா கொடுத்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி அவரிடம் திருப்பித் தரவில்லை என்று குற்றம் சாட்டுவது போல் இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இப்படிச் சொல்லியிருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவைச் சந்திக்கவிருக்கிறார் என்கிற வதந்திக்கு வலு சேர்ந்திருக்கிறது.

Leave a Response