குற்றமே செய்யாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய அதிர வைக்கும் கட்டுரை

இந்து ஆங்கில நாளிதழில் பேரறிவாளனுக்குத் தொடக்கத்தில் இருந்தே இழைக்கப்பட்டு வரும் அநீதியைச் சுட்டிக் காட்டும் கட்டுரை பிப்ரவரி 6 அன்று வெளியாகி உள்ளது.அனுப் சுரேந்திரநாத் மற்றும் திரிஷா சந்திரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

அதன் சுருக்கம் வருமாறு —

இராசீவ் காந்தி கொலையில், பேரறிவாளனின் பங்கு என்ன என்பது பற்றி உறுதியாகத் தெரியாமலேயே அரசு நிறுவனங்கள் தொடர்ந்து அவரைச் சிறைக்குள் அடைத்து வைப்பதிலேயே குறியாய் இருந்தது மிகப்பெரும் அநியாயம்.

இந்தக் கொலைச் சதியின் மையமாக இருந்தவர்களை அடையாளங்கண்டு, அவர்களைக் கைது செய்ய முடியாமல், இவ்வழக்கில் விளிம்பு நிலையில் குற்றம் இழைத்தவர்களது வாழ்வைத் தியாகம் செய்ய வைத்தது, அரசு நிறுவனங்களின் போக்கிற்கு அருமையான எடுத்துக்காட்டாக உண்மையில் திகழ்கிறது.

மத்தியப் புலனாய்வு அமைப்பு, தடா மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி பேரறிவாளன் மீது சுமத்திய குற்றச்சாட்டை விசாரணை நீதிமன்றம் முதலில் உறுதிப்படுத்தியது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் மீதான குற்றச்சாட்டு மட்டும் ஏற்கப்பட்டு, 30 ஆண்டுகள் அவர் சிறையில் உள்ளார்.

( அவரது மரண தண்டனை 2014 /பிப்ரவரியில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ) பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் அநீதிக்கு இது நியாயம் செய்ததாகாது.

இந்தியச் சாட்சிச் சட்டப்படி, காவல்துறை அதிகாரியிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லத்தக்கதல்ல. ஆனால், தடா மற்றும் பொடாச் சட்டத்தில், மாவட்டக் கண்காணிப்பாளர் பதவிக்குக் கீழ் இல்லாத ஒருவரிடம் தரும் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பேரறிவாளன் இரண்டு ஒன்பது வோல்ட் கார் பேட்டரியை வாங்கி முக்கியக் குற்றவாளியிடம் தந்ததாகவும், இராசீவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டில், அந்த பேட்டரி பயன்படுத்தப் பட்டதாகவும், காவல் கண்காணிப்பாளர் வி.தியாகராஜனிடம் பேரறிவாளன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்தான், சிபிஐயின் முக்கிய ஆயுதமாக இருந்தது.

ஆனால் 2013 நவம்பரில் காவல் துறையைச் சார்ந்த தியாகராஜன், பேரறிவாளன் முன்பு தந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தான், துல்லியமாகப் பதிவு செய்யவில்லை என்பதைத் திசம்பர் 2017 -ல் உச்சநீதி மன்றத்தில் உறுதிப் பத்திரத்திரமாகச் சமர்ப்பித்தார். பேட்டரி எதற்காக வாங்கப்பட்டது எனத் தனக்குத் தெரியாது என முதலிலேயே பேரறிவாளன் சொன்னதை, தான் பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாக தியாகராஜன் அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

சாராம்சத்தில், ஒரு காவல்துறை அதிகாரி எழுதிய தவறான வாக்குமூலத்தால், பேரறிவாளன் தண்டிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் தடா குற்றச்சாட்டுகளைக் கைவிட்ட பிறகும், தடாச் சட்ட விதிகளின் கீழ் பேரறிவாளன் தந்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தண்டனைச் சட்டக் குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்பட்டது நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது.

இராசீவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு யாரால் / எப்படி செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள், சிபிஐ விசாரணையில் தெளிவற்ற முறையில் இருப்பதாக,
1998 மார்ச்சு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நீதிநாயகம் எம்.சி.ஜெயின் அறிக்கை (ஜெயின் குழு அறிக்கை) கண்டறிந்தது.

எனவே இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்ள, பல்நோக்குக் கண்காணிப்பு முகமையை ( MDMA ) 1998 திசம்பரில்
சிபிஐ உருவாக்கியது.

இராசீவ் கொலையில் தொடர்புடைய விரிவான சதித்திட்டத்தைப் பற்றியும், அக்கொலையில் பயன்படுத்தப்பட்ட மனிதவெடிகுண்டின் (Human Belt Bomb) மூலாதாரம் பற்றியும் விரிவான விசாரணை செய்வது அதன் நோக்கமாக இருந்தது.

கடந்த இரு பத்தாண்டுகளாக மூடப்பட்ட உறையில் அறிக்கைகளைத் தடா நீதிமன்றத்தில் பல்நோக்குக் கண்காணிப்பு முகமை சமர்ப்பித்து வந்தது. ஆனால் இவற்றைக் காணப் பேரறிவாளனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் பகுதியாகப் பேரறிவாளனும், அவரோடு குற்றம் சாட்டப்பட்டவர்களும் இருக்கவில்லை எனப் பல்நோக்குக் கண்காணிப்பு முகமைத் திரும்பத் திரும்பக் கூறி வந்தது. அதாவது வெடிகுண்டின் மூலாதாரமும், அது எவ்வாறு செய்யப்பட்டது என்பதும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது என அரசின் உயர்மட்ட அளவிலேயே ஒப்புக்கொள்ளப் பட்டதோர் சூழல் சாராம்சத்தில் நிலவுகிறது.

ஆனாலும், எந்தப் பயன்பாடு கருதி பேட்டரி வாங்கப்பட்டது என்பது தெரியாமலேயே, பேட்டரி வாங்கிய குற்றத்திற்காகப் பேரறிவாளன் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இத்தகைய பெரும் சதிப் பின்னணி இருப்பினும், பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம் அம்மாவும் பேரறிவாளனின் சிறைவாழ்வை முடிவுக்குக் கொண்டுவரும் ஓய்வற்ற போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

ஆயினும், அரசமைப்புச் சட்டத்தின் 161- ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநரின் மன்னிப்பைப் பெறும் தகுதி, பேரறிவாளனுக்கு உண்டு. 2015 ஆம் ஆண்டிலிருந்து மன்னிப்புக் கோரும் அவரது விண்ணப்பம் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் அறிவுரையின் பேரில், மன்னிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் கடமைப்பட்டவர் ஆவார்.

இதற்கிடையில், தெளிவற்ற நிலையை ஓர் உத்தியாகப் பயன்படுத்தி, பேரறிவாளனின் சிறைத் தண்டனையை ஒன்றிய அரசு நீட்டித்து வருகிறது. மன்னிக்கும் பிரச்சனை என்பது முழுக்கமுழுக்க ஆளுநருக்கும், பேரறிவாளனுக்கும் இடையிலானது என ஒன்றிய அரசு முதலில் சாதித்தது.

ஆனால் 2020 திசம்பர் மாதத்தில், அரசமைப்புச் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாத வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முன்னெடுத்தது. அதாவது பேரறிவாளனை மன்னிக்கும் அதிகாரம், இந்தியக் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது என அது கூறியது.

சில நாட்களுக்குள் பேரறிவாளன் மன்னிப்புக் குறித்து ஆளுநர் ஒரு முடிவு எடுப்பார் எனச் சனவரி 21 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மீண்டும் அறிக்கை சமர்ப்பித்தது.

பிறகு, பேரறிவாளன் மன்னிப்புக் குறித்து இறுதியாக ஆளுநர் ஓர் முடிவு எடுத்து விட்டார் எனவும், பேரறிவாளனின் விண்ணப்பம் குறித்து முடிவெடுக்கக் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஆளுநர் தீர்மானித்து உள்ளார் எனவும் பிப்ரவரி நான்காம் நாள் ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இது அரசமைப்புச் சட்டக் கடமையைக் கைவிடும் ஓர் அதிர்ச்சி தரும் சட்டமீறலாகும். மேலும் அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசின் அறிவுரையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஆளுநர், அதைப் புறக்கணிக்கும் அப்பட்டமான, சட்டப்புறம்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பேரறிவாளன் கைது செய்யப்பட்ட பொழுது, அவருக்கு 19 வயது. 30 ஆண்டுகள் கழித்தும், தனது விடுதலைக்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த 30 ஆண்டுகளில், இந்திராகாந்தி தேசியத் திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில், BCA மற்றும் MCA பட்டங்களையும், இருசக்கர வாகன இயந்திரவியல், மேலாண்மைத் திறன்கள், சத்துணவு போன்ற பல்வேறு பட்டயப் படிப்புகளையும் அவர் முடித்துள்ளார்.

“தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு வேண்டுகோள்” எனும் தனது நூலில், வெடிகுண்டு தயாரித்ததில், தனக்குத் தொடர்பு ஏதும் இல்லை எனப் பல்நோக்குக் கண்காணிப்பு முகமை கண்டறியும் எனக் குறிப்பிட்டு உள்ளார். இழந்து போன தனது வாழ்வை யாரால் மீட்டுத்தர முடியும் எனப் பிறகு நம்மை அவர் கேட்கிறார்.

பேரறிவாளனது ஒப்புதல் வாக்குமூலம், மோசடியாக மாற்றப்பட்டதையும், வெடிகுண்டின் மூலாதாரம் பற்றி அரசு நிறுவனங்களுக்கே எதுவும் தெரியாது என அவை ஒப்புக் கொள்வதையும், வெடிகுண்டு விசாரணையில் பேரறிவாளனுக்குப் பங்கில்லை என்பதையும் தெரிந்து கொண்டிருக்கும் நாம், பேரறிவாளன் இன்னும்கூடச் சிறையில் இருப்பது ஏன் என நம்மை நாமே கட்டாயம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் பிரதம அமைச்சரின் படுகொலை குறித்து வெற்றிகரமாக விசாரிக்காத நமது கூட்டுத் தோல்வியை ஒப்புக்கொள்ள அஞ்சி, பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருக்கிறோமா?

நமது தோல்விக்கு விலையாக, பேரறிவாளனின் வாழ்கையைக்
தரக்கோருவது மிகவும் கொடூரமானது.

( அனுப் சுரேந்திரநாத் மற்றும் திரிஷா சந்திரன் ஆகியோர் தில்லி தேசியச் சட்டப் பல்கலைக் கழகத்தின் 39 A திட்டத்தில் பணியாற்றுபவர்கள் )

Leave a Response