அதிமுகவில் சசிகலா – பாசக கருத்து என்ன?

தமிழக பா.சனதா மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது….

தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைமை முடிவு எடுத்துள்ளது. எத்தனை இடங்கள் பா.சனதாவுக்குக் கிடைக்கும் என்று தெரியவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எத்தனை இடங்களை நாங்கள் கேட்கிறோம் என்பதை விட எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதே முக்கியம்.

ஆட்சியில் பா.சனதா பங்கு கொள்வது குறித்து தேர்தலுக்குப் பின்னரே முடிவு செய்வோம். தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.சனதா இரட்டை இலக்க எண்களில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நோக்கம்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். சசிகலா வருகை என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். இந்த விசயத்தில் அ.தி.மு.க. என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு எங்களின் ஆதரவு உண்டு.

அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் அவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. இன்னும் புதிய கட்சிகளைச் சேர்ப்பது குறித்து அ.தி.மு.க. முடிவு செய்யும்.

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநரின் முடிவை நாங்கள் ஏற்கிறோம். இராஜீவ்காந்தி கொலையை ஏற்க மாட்டோம். பயங்கரவாதிகளை ஆதரிக்க மாட்டோம்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response