சனவரி 29 இல் ஆளுநரிடம் பேசியது என்ன? – எடப்பாடி உண்மை சொல்ல கி.வெ வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில்
தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

தனது சட்டக் கடமையை முற்றிலும் மீறி ஏழு தமிழர் விடுதலை குறித்து தான் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தனது முன்விடுதலை கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், நீதிபதி நாகேசுவரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரையின் மீது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர், ஆளுநர் மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று முதலிலும், அடுத்த நாள் ஒருவாரத்தில் முடிவெடுப்பார் என்றும் பதிலுரை தாக்கல் செய்தது.

இந்நிலையில், 2021 சனவரி 25ஆம் நாளிட்ட தனது கடிதத்தின் வழியாக ஆளுநர் “இதுகுறித்து, தான் முடிவெடுக்க முடியாது. தொடர்புடைய அதிகாரமுள்ளவர் குடியரசுத் தலைவர்தான்” என்று தெரிவித்துவிட்டதாக நேற்று (04.02.2021) உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர் பதிலுரை அளித்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-இன்படி, ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். அவருக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு அதிகாரமும் கிடையாது. இந்த நிலையில், ஆளுநர் புரோக்கித்தின் இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்! தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே உள்ள தகுதியை இழந்துவிட்டார்.

ஏழு தமிழர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, சட்டமன்றத்தில் பதிலுரைத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தான் கடந்த 2021 சனவரி 29 அன்று ஆளுநரை சந்தித்து ஏழு தமிழர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்கிறார்கள் என்றும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்தது சனவரி 29ஆம் நாள். ஆனால், ஆளுநரோ சனவரி 25ஆம் நாளே ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, தனது பதிலுரையை அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணமும் அதை உறுதி செய்கிறது.

அப்படியானால், சனவரி 29 அன்று தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் ஆளுநர் இந்த உண்மையை மறைத்திருக்கிறாரா? அல்லது ஆளுநர் இந்த உண்மையைச் சொன்ன பிறகும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லியிருக்கிறாரா என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்!

இச்சிக்கலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை தொடர்ந்து கூறிவருகிறோம். பேரறிவாளன் தொடர்பான பரோல் வழக்கிலேகூட, அவரை சிறை விடுப்பில் விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டது. அதனைப் புறக்கணித்து, உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கியது. எடப்பாடி பழனிச்சாமி அரசின் அணுகுமுறைக்கு இது சான்று கூறுகிறது!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து இப்போதாவது உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

ஆளுநரின் அப்பட்டமான இந்த சட்டமீறல் அவரது தமிழினப் பகைப் போக்கை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே அன்றைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2015ஆம் ஆண்டு திசம்பரில் உறுப்பு 161இன்படி, மாநில அமைச்சரவை பரிந்துரை பெற்று ஆளுநர் இராசீவ்காந்தி வழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் அரசமைப்பு உறுப்பு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும், மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வழி ஏற்படுத்த வேண்டும்.

இந்திய அரசு தனது தமிழினப் பகை நோக்கை செயல்படுத்துவதற்காக எந்தளவுக்கு சட்ட மீறலில் ஈடுபடும் என்பதையும், தமிழ்நாடு அரசு பா.ச.க. அரசோடு தனக்குள்ள கீழ்நிலை உறவுக்காக தமிழர் உரிமையை மட்டுமின்றி, தனது அமைச்சரவைக்கு உள்ள சட்ட உரிமையை பலியிடும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இச்சிக்கலில் நடந்த உண்மை என்ன என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டுமென்றும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு உண்மையாக செயல்பட வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response