ஈரோடு கடலூர் மருத்துவ மாணவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு

மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டுமென்ற மருத்துவ மாணவர்களின் கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது முதல் அப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றின் மாணவர் சேர்க்கையைத் தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.

அன்று முதல் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், அக்கல்லூரியின் கல்விக்கட்டணம் மட்டும் தனியார் கல்லூரியாகச் செயல்பட்டபோது இருந்த அளவிற்கே ரூ. 5.44 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.

அதேபோன்று, போக்குவரத்துத்துறையால் நிர்வகிக்கப்பட்ட பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரியைக் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசே ஏற்று, தற்போது ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரியாகச் செயல்படும் நிலையில், அக்கல்லூரிக்கான கட்டணமாக ஆண்டிற்கு ரூ. 3.85 இலட்சம் எனத் தனியார் கல்லூரிக்கு இணையாகவே தொடர்ந்து வசூலிக்கப்படுவது பெற்றோர்களையும், மாணவர்களையும் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.

இந்த இரு மருத்துவக்கல்லூரிகளையும் அரசே ஏற்றுக்கொண்ட பிறகு, அவை அரசு மருத்துவக்கல்லூரிகளாகவே செயல்படுகின்றன. அவ்வாறிருக்கும்போது, இதர அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைத்தான் இக்கல்லூரிகளிலும் நிர்ணயித்திருக்க வேண்டும். அதனைவிடுத்து, தனியார் மருத்துவக்கல்லூரிகளைவிடக் கூடுதலாகக் கட்டணத்தை வசூல் செய்வது என்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறும் நிர்வாகச்சீர்கேடாகும்.

இச்செயல், வசதி படைத்தோருக்காகத் தனியாக இரண்டு மருத்துவக்கல்லூரிகளை அரசே நடத்துவது போல உள்ளது. இது சமூக நீதிக்கும், ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் முற்றிலும் எதிரானது.

இந்த இரு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை இதர அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டுமென்று ஏற்கனவே, கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தேன். அதனை ஏற்றுத் தற்போது உயர் கல்வித்துறையின் கீழ் இருந்த சிதம்பரம் இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியைக் கட்டணக்குறைப்பு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே! எனினும், இந்த அறிவிப்பு மட்டுமே போதுமானதன்று.

ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டு பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரி மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் கட்டணக்குறைப்புச் செய்யாமல் தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு இணையான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அக்கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இதுவரை எவ்விதக் கட்டணக்குறைப்பும் செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியது. அதுபோன்றதொரு வெற்றுக்கண்துடைப்பு அறிவிப்பாக இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பும் இருந்துவிடக்கூடாது என்ற அச்சம் மாணவர்களிடத்தும், பெற்றோர்களிடத்தும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, கடலூர் மற்றும் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு இணையாக நடப்பு கல்வியாண்டு முதலே குறைப்பதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு, மாணவர்களின் பெருஞ்சுமையைக் குறைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response