எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் தில்லி பயணம் – விவரங்கள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அவருடைய பயணத்திட்ட விவரம்…..

சென்னை விமான நிலையத்தில் இருந்து பகல் 11.55 மணிக்கு தில்லி செல்லும் விமானத்தில் அவர் செல்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதலமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் செல்கிறார்கள். மதியம் 2.45 மணிக்கு விமானம் தில்லியைச் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்குச் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வெடுக்கிறார்.

இரவு 7.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசுகிறார்.

இரவு வேளையில் அமித்ஷா வீட்டில் சந்திப்பு நடப்பதால், இது தேர்தல் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

அமித்ஷாவுடனான சந்திப்பைத் தொடர்ந்து, தில்லியில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசுகிறார்.

இந்தச் சந்திப்பின்போது, அவரிடம் தமிழ்நாட்டுக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்கிறார் என்றும் நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்ததை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்து, கொரோனா ஒழிப்பில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை, வருவாய் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து மீள மத்திய அரசாங்கம் சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரவிருக்கிறார்.

இதுதவிர, கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசாங்கம் சிறப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோருகிறார். தமிழ்நாட்டிற்கு வந்து வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இணைப்பு மெட்ரோ ரெயில் திட்டத்தைத் தொடங்கிவைக்க பிரதமருக்கு அழைப்புவிடுக்கிறார்.

இதுமட்டுமில்லாமல், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக கரூர் – புதுக்கோட்டை இடையே 11 கிலோ மீட்டர் கால்வாய் தோண்டும் திட்டத்தைத் தொடங்கிவைக்கவும், கல்லணை – கீழ்பவானி விரிவாக்கத் திட்டங்களை தொடங்கிவைக்கவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் 1000 மெகாவாட் சூரிய வெப்ப மின்சாரத் திட்டத்தையும், இராமநாதபுரம், தூத்துக்குடி கியாஸ் குழாய் திட்டத்தையும் தொடங்கிவைக்க அழைப்பு விடுக்கிறார்.

கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் திட்டம் போல, காவிரி நதியைச் சுத்தப்படுத்தி வழிநெடுக எந்த இடத்திலும் கழிவு நீர் கொண்டு விடப்படுவதைத் தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது உள்பட பல திட்டங்களைச் செயல்படுத்தும் ‘நடந்தாய் வாழி’ காவிரி திட்டத்திற்கும் நிதி உதவி கோருகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக அவர் பிரதமரைச் சந்திக்க இருக்கிறார் என்ற நிலையில், அதிகாரிகள் இல்லாமல் பிரதமரைத் தனியாகச் சந்திக்கவும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி குறித்து பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை 5.10 மணிக்கு விமானம் மூலம் தில்லியில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்குச் சென்னை வந்தடைகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response