பயனாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, புதிய தனிநபர் தகவல் கொள்கை அமலாக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனம் 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
கைபேசி செயலிகளில் இருந்து பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. ஆப்களை இயக்கும் நிறுவனங்கள், இந்த தகவல் திருட்டை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப், பயனாளர்களின் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வதற்கு உரிமை கோரும் புதிய மாற்றத்தை சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் பயனாளர்கள் மட்டுமே, வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பல கோடி பயனாளர்கள், சிக்னல் உள்ளிட்ட மற்ற ஆப்களுக்கு மாற தொடங்கி விட்டனர். பயனாளர்களின் தகவல்களை பகிர்வதற்கு ஒப்புதல் அளிக்க, அடுத்த மாதம் 8ம் தேதி வரை வாட்ஸ்அப் கெடு விதித்து இருந்தது. ஆனால், பயனாளர்கள் வேறு ஆப்களுக்கு மாறுவது, தனது புதிய தனிநபர் கொள்கைக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு ஆகியவற்றை பரிசீலித்த வாட்ஸ் அப் நிறுவனம், புதிய கொள்கையை அமல்படுத்துவதை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்தது.
அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்கள் நிறுவனத்தின் புதிய கொள்கை குறித்து பல்வேறு தரப்பிலும் கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். பயனாளர்கள் குழப்பம் அடைய வேண்டாம். புதிய தனிநபர் கொள்கைகள் குறித்த தகவல்கள் தவறாக திரித்து கூறப்படுவதால் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய தனிநபர் கொள்கை திட்டம், மே 15ம் தேதி அமல்படுத்தப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
வாட்சப் அறிவிப்பில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* எந்தவொரு பயனாளரின் கணக்கும் பிப்ரவரி 8ம் தேதியுடன் முடக்கப் படாது. புதிய கொள்கை வரும் மே 15ம் தேதி அமல்படுத்தபடும் முன், பயனர்களின் பொதுவான கருத்துகள் கேட்கப்படும்.
* பயனாளர்களின் தனிப்பட்ட செய்திகளை பார்க்கவும், அழைப்புகளை கேட்கவும் முடியாது. இவற்றை முகநூலில் பகிரவும் முடியாது.
* பயனாளர்களின் அழைப்பு உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படாது. இவை முகநூலில் பகிரப்படாது.
* பயனாளர்கள் அனுப்பும் இருப்பிடத்தை வாட்ஸ்அப் செயலி பதிவு செய்யாது. மேலும் முகநூலில் பகிரப்படாது.
* பயனாளர்களின் தொடர்புகள் பற்றிய தகவல் முகநூலில் பகிரப்படாது.
* வாட்ஸ் அப்பில் பயன்படுத்தும் குழுக்கள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.
* பயனாளர்கள் தங்கள் செய்திகளை அழிப்பதற்கான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.
* பயனாளர்கள் தங்களின் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.