ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருப்பவர் ஆ.செந்தில்குமார்.மாணவப் பருவத்திலிருந்தே திமுக உறுப்பினராக இருக்கிறார்.
சுப்புலட்சுமி ஜெகதீசன் தடா சட்டத்தில் கைதான போது, நாள் தோறும் இன்று பத்தாவது நாள், பதினோராவது நாள் என்கிற விளம்பரத் தட்டிகளை ஈரோடு நகர வீதிகளில் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். ஈரோட்டில் திமுகவை வளர்த்த முன்னணித் தலைவர்கள் மா.சுப்பிரமணியம்,செ.அரங்கராசன்,ப.ச.விசுவநாதன் ஆகியோர் காலத்தில் இருந்து திமுகவில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த போதும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்கு வாய்ப்புக் கொடுக்கும் நிலை இருக்கிறதாம். ஆனால் தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் சு.முத்துசாமி அவருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் தடுப்பதற்குண்டான வேலைகளைச் செய்துவருகிறாராம்.
சு.முத்துசாமி அதிமுக அமைச்சராக இருக்கும்போது ஈரோட்டில் திமுகவே இருக்கக்கூடாது என்று வேலை பார்த்தவர். அப்போது அவரை எதிர்த்து நின்று திமுகவைப் பாதுகாக்கப் போராடியவர்களில் ஒருவர் ஆ.செந்தில்குமார்.
காலமாற்றத்தில் சு.முத்துசாமியே திமுகவுக்கு வந்துவிட்டார். இப்போது அவர் முட்டுக்கட்டை போடுவதால் ஆ.செந்தில்குமாருக்கு வாய்ப்பு தடைபடுகிறது என்று ஈரோடு திமுகவினர் புலம்புகின்றனர்.