நான்காண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து மட்டைப்பந்து அணி, 2021 சனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஐந்துநாள் போட்டி, ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இதற்காக அந்த அணி தனது இலங்கையுடான போட்டித் தொடர் முடிந்ததும் அங்கிருந்து நேரடியாக சனவரி 27 ஆம் தேதி சென்னை வந்தடைகிறது.

இங்கிலாந்து-இந்தியா அணிகள் இடையிலான தொடருக்கான போட்டி அட்டவணையை இங்கிலாந்து மட்டைப்பந்து வாரியத்தின் ஒப்புதலுடன் இந்திய மட்டைப்பந்து வாரியம் நேற்று வெளியிட்டது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியா-இங்கிலாந்து தொடர் முழுவதும் சென்னை, ஆமதாபாத், புனே ஆகிய 3 நகரங்களில் மட்டும் அரங்கேறுகிறது. கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருக்க வேண்டும் என்பதால் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், உலகின் வலுவான இரு அணிகள் மோதும் இந்தப் போட்டித் தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐந்துநாள் போட்டித் தொடர் சென்னை மற்றும் ஆமதாபாத்தில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் 2 ஐந்துநாள் போட்டிகள் முறையே பிப்ரவரி 5 மற்றும் 13 ஆம் தேதிகளில் தொடங்குகிறது. 3 ஆவது, 4 ஆவது மற்றும் கடைசிப் போட்டி ஆமதாபாத்தில் முறையே பிப்ரவரி 24, மார்ச் 4 ஆகிய தேதிகளில் தொடங்குகிறது.

3 ஆவது ஐந்துநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான சர்தார் பட்டேல் மொடேரா மைதானத்தில் நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரிய மட்டைப்பந்து மைதானமான இது 1 இலட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டதாகும்.

கடைசி 2 ஐந்துநாள் போட்டி நடைபெறும் ஆமதாபாத் மைதானத்தில் தான் ஐந்து 20 ஓவர் போட்டிகளும் நடைபெறுகிறது. அவை முறையே மார்ச் 12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் புனேயில் முறையே மார்ச் 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்துநாள் போட்டி கடைசியாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு இப்போது தான் மீண்டும் ஐந்துநாள் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response