முழு அடைப்புக்கு ஆதரவு தஞ்சையில் மறியல் – பெ.மணியரசன் அழைப்பு

மூன்று சட்ட முறியடிப்பு முழு அடைப்பில் (08.12.2020) பங்கேற்பீர் என்று காவிரி உரிமை மீட்புக்குழு
ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

பெருங்குழும வேட்டைக்கான மூன்று சட்டங்களை வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் அவசரச் சட்டங்களாக 2020 சூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே அவற்றை எதிர்த்து ஊர் ஊராகத் துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தது காவிரி உரிமை மீட்புக்குழு. அத்துடன் அந்த மூன்று அவசரச் சட்ட நகல்களையும் எரித்துப் போராடினோம்.

ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றத்தின் வழியாக நிரந்தரச் சட்டங்களாக்கியுள்ளது மோடி அரசு.

இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக நீக்க வேண்டும் என்று உறுதியாகக் கோரி பஞ்சாப், அரியானா, உ.பி., உத்தரகாண்ட், இராசஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் புதுதில்லியைப் பத்து நாட்களுக்கு மேலாக முற்றுகை இட்டுப் போராடி வருகிறார்கள்.

அவர்கள் அமைத்துள்ள போராட்டக் குழு மூன்று சட்டங்களை நீக்க வலியுறுத்தி 8.12.2020 அன்று அனைத்திந்திய முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்பை ஏற்று, 8.12.2020 முழு அடைப்பில் காவிரி உரிமை மீட்புக் குழு பங்கேற்கிறது.

தஞ்சையில் புதாற்றுப் பாலத்தில் (பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்), 08.12.2020 சரியாகக் காலை 9 மணிக்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும், நான் அப்போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். காவிரி உரிமை மீட்புக் குழுவின் மற்ற தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

உழவர்களும் உரிமை மீட்பு உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response