தலைநகர் டெல்லியிலே குவிந்துள்ள விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பை நடத்துவது தங்களுக்காக மட்டுமல்ல, நமக்காக! தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க! பட்டினிச் சாவைத் தடுத்திட! நம்மைக் காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம். அவர்களுக்கு அரணாக இருப்போம். நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம். அதனை வெற்றி பெறச் செய்வோம்!” எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவர் எழுதியுள்ள மடல் வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கலப்பையைக் கையிலே பிடித்து உழைப்பை மண்ணிலே விதைத்து, உலகத்தார் அனைவருக்கும் பேதம் பார்க்காமல் உணவளிக்கும் விவசாயப் பெருமக்கள், இந்தியத் தலைநகரில் கடந்த 12 நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீரத்துடன் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிசம்பர் 5-ஆம் நாள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே மக்களின் பேராதரவுடன் கூடிய வரவேற்பை ஏற்று, பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய விபரீதங்களை விளக்கி உரையாற்றினேன்.
“புரெவி” புயல் சின்னத்தின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களும் மழை வெள்ளம் சூழ்ந்து தத்தளிப்பதை அறிந்து கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கழகத்தின் சார்பில் இயன்ற அளவிற்கு அவர்களுக்கான உதவியையும் அளித்துவிட்டு, சென்னை திரும்பினேன். தமிழகத் தலைநகரிலும் மழை – வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அதனால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதிவாசிகள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து உதவிகள் அளித்து, ஆறுதல் கூறினேன்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்போரில் அதிகம் பேர் விவசாயப் பெருங்குடி மக்கள்தான். பாடுபட்டு விளைவித்த பயிர் பாழாகிக் கிடப்பதை நெஞ்சப் படபடப்புடன் எடுத்துக் காட்டினார்கள். தங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என்பதையும் கண்ணீருடன் சொன்னார்கள். தி.மு.கழகம் அவர்களின் நலனுக்காகப் பாடுபடும் – எப்போதும் துணை நிற்கும் என்ற உறுதியினை அளித்துவிட்டு வந்தேன். விவசாயிகளின் நிலை என்பது இதுதான்.
‘உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று கிராமப்புறத்திலே சொல்வார்கள். எவ்வித பாதுகாப்பும் இன்றி, அன்றாடம் அயராது பாடுபடும் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்கள் அமைந்திருப்பதால்தான் பகலா – இரவா எனப் பார்க்காமல், வெயிலா – குளிரா என நோக்காமல் இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் உறுதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் விவசாயப் பெருமக்கள்.
தங்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கத் தலைநகரில் குவிந்துள்ள விவசாயிகளுடைய பேரணியின் நீளம் 80 கிலோ மீட்டர். ஏறத்தாழ 96 ஆயிரம் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் 1 கோடியே 2 லட்சம் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். இந்தியா இதுவரை இப்படியொரு போராட்டத்தைக் கண்டதில்லை. அதனால் அது உலகக் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அரசுத் தரப்பிலிருந்து விவசாயப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையின்போது விவசாயச் சங்க பிரதிநிதிகள் 25 நிமிடம் அமைதி காத்து – உள்ளிருப்புப் போராட்டத்தை அறவழியில் நடத்தினர். வேளாண் திருத்தச் சட்டங்களையும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ‘ஆம்’ என்று ஏற்கப்போகிறதா, ‘இல்லை’ என்று நிராகரிக்கப் போகிறதா என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி நின்றனர் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.
மத்திய ஆட்சியாளர்களின் தேன் தடவிய வார்த்தைகளை அவர்கள் நம்பவில்லை. அவர்கள் நிரந்தரத் தீர்வு கோருகிறார்கள். அதற்காக இதுவரை இல்லாத வகையில், அதே நேரத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்குட்பட்டு அறவழிப் போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். அதற்காக மக்களின் ஆதரவைத் திரட்டுகிறார்கள். நாடு தழுவிய முழு அடைப்பான பாரத் பந்த்-ஐ டிசம்பர் 8 அன்று நடத்துகிறார்கள்.
மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறக் கோரும் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு தி.மு.கழகமும் தோழமைக் கட்சிகளும் முழு ஆதரவை வழங்கியிருப்பதுடன், பொதுமக்களும் இதற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகள் பிரச்சினைதானே, அரசாங்கம் பார்த்துக் கொள்ளட்டும் என நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. ஏனெனில், உணவளித்து நம் உயிர் வளர்ப்பவர்கள் உழவர்கள். அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தனிப்பட்ட பாதிப்பு. ஒட்டுமொத்தமாக நாட்டுக்கே பேரிழப்பு.
வேளாண் திருத்தச் சட்டங்கள் பற்றி ‘மன் கி பாத்’ எனும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாகத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. விவசாயிகளோ, “எங்கள் மனதின் குரலைக் கேளுங்கள் பிரதமரே”என்கிறார்கள். அது, விவசாயிகளின் மனதின் குரல் மட்டுமல்ல, இந்திய ஒன்றியத்தில் வாழ்கின்ற 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவருடைய மனதில் குரல். அந்தக் குரலை அலட்சியப்படுத்தும் ஆணவக் குரலை வெளிப்படுத்துகிறார்கள் மத்திய – மாநில ஆட்சியாளர்கள்.
தன்னை விவசாயி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழ்நாட்டின் ‘விபத்து முதலமைச்சர்’ எடப்பாடி பழனிசாமி, இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை ஆதரித்து, விவசாயிகளை வஞ்சித்தவர். அவரது கட்சி எம்.பி.க்களின் ஆதரவால்தான், விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடும் இந்த வேளாண் திருத்தச் சட்டங்கள் நிறைவேறின. வேளாண் திருத்தச் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்கிறார் பிரதமர். அதனை வழிமொழிகிறார் விபத்து முதலமைச்சர்.
ஒவ்வொரு விவசாயியும் விளைவிக்கும் தானியங்கள் – காய்கறிகள் – பழங்கள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என ஒன்று நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த விலை நிர்ணயிக்கப்பட்டால்தான், விவசாயிகளின் உழைப்புக்கு உரிய நியாயம் கிடைக்கும். ஆனால், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை என்பதே எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதனால், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உத்தரவாதமான விலை கிடைக்காது. இதில், இரட்டை வருமானம் என்பது ஏமாற்று வார்த்தையே!
வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என்று பிரதமரும், இடைத்தரகு – அரசியல் தொழில் செய்யும் முதலமைச்சரும் கூறுகிறார்கள். இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றால், விவசாயிகளின் உற்பத்தியை வாங்கக்கூடியவர்கள் யார் என்பது நியாயமான கேள்வி. உலைநீருக்குப் பயந்து, எரிகிற அடுப்பில் குதித்த கதையாகத்தான் மத்திய – மாநில ஆட்சியாளர்களின் விளக்கம் உள்ளது. இடைத்தரகர்கள் ஒழிகிறார்களோ இல்லையோ, விவசாயத்தை முழுமையாக கார்ப்பரேட் நிறுவனங்களே கையகப்படுத்தும். அதற்கான வழிவகைகளை இந்த வேளாண் திருத்தச் சட்டங்கள் கொண்டு வருகின்றன.
இதன் மூலமாக, ஒரு விவசாயி என்ன விளைவிக்கலாம், யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அரசாங்கத்தை மீறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள இந்தச் சட்டங்கள் வழி வகுக்கின்றன. இடைத்தரகர்களை ஒழிக்கிறோம் என்று இவர்கள் சொல்வது, பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய கார்ப்பரேட்டுகளை உள்ளே நுழைப்பதற்குத்தான்.
சிறு – குறு விவசாயிகளே நிறைந்த இந்தியாவில், ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த காய்கறி போன்றவற்றை எவ்வித இடைத்தரகருமின்றி மார்க்கெட்டில் விற்றுப் பயன்பெறும் வகையில், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் உழவர் சந்தை எனும் உன்னதத் திட்டம். விளைவித்த பொருட்களைக் கொண்டுவர, பேருந்துகளில் இலவச பாஸ் வழங்கியதும் தலைவர் கலைஞர் அரசுதான். அத்தகைய உழவர் சந்தைகளுக்கு, கார்ப்பரேட் நலன் காக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களில் இடம் இருக்காது. இதுவா, இடைத்தரகரை ஒழிக்கும் லட்சணம்?
பெரிய வியாபாரிகள், பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்கள் இவர்களின் கொள்ளை லாபங்களுக்கேற்ப விவசாயிகளை அடிமையாக்கி, விவசாய நிலங்களை அபகரித்து, அவர்களிடம் தாரை வார்ப்பதுதான் வேளாண் திருத்தச் சட்டத்தின் மறைமுக நோக்கம். குளிர்பதன வசதியுள்ள விவசாயிகள் நாட்டில் எத்தனை பேர்? விளைவிக்கும் பொருட்களைக் குளிர்பதனக் கிடங்கு வைத்திருக்கும் பெரு முதலாளிகளிடம் கையளிக்க வேண்டிய நிலைக்கு விவசாயம் தள்ளப்படும்.
தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு விவசாயமும் அதன் விளைச்சலும் செல்லும்போது இந்திய உணவுக் கழகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நேரடிக் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, அவற்றுக்கு மூடு விழா நடத்தப்படும் அபாயம் உள்ளது. இந்திய உணவுக் கழகத்தால் சேமித்து வைக்கப்படும் மத்திய தொகுப்பு உணவு தானியங்களிலிருந்து அவசரத் தேவை காலத்தில் மாநிலங்களுக்கான உணவுத்தேவை மானிய விலையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களால், குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதுகாப்பான விலை கிடைத்து வருகிறது. அதுபோலவே, நேரடிக் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக நெல் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவும் மொத்தமாகவும் கொள்முதல் செய்யப்பட்டுப் பாதுகாப்பை அளித்து வருகின்றன. கார்ப்பரேட்டுகளை நுழைக்கும் மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களால் இவையனைத்தும் பறிபோகும் என்பதைக்கூட மறைத்துவிட்டு, மத்திய அரசிற்கு வக்காலத்து வாங்கி விவசாயிகளுக்குத் துரோகம் இழைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்திய உணவுக்கழகம், ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், நேரடிக் கொள்முதல் நிலையங்கள் இவை மூடப்பட்டால் அது விவசாயிகளுக்கு மட்டும் பாதிப்பல்ல. பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் தங்கள் உணவுத்தேவையை நிறைவேற்றி வரும் கோடிக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்படும். அரசுத் தரப்பின் பாதுகாப்பான – நியாயமான கொள்முதல்-சேமிப்பு ஆகியவை தகர்ந்துபோனால், தனி மனிதருக்கான உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே. மத்தியத் தொகுப்பிலிருந்து கிடைக்கக்கூடிய மானிய விலையிலான உணவுப் பொருட்கள், மாநில அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து வழங்கக்கூடிய உணவுப்பொருட்கள் ஆகியவை தடைப்படும்போது, நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்தப்படும்.
இந்தியாவிலேயே நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுவிநியோகத் திட்டத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றியது தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு என்பதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களிலிருந்து-நடுத்தர மக்கள் வரை பலரும் ஒவ்வொரு வகையில் நியாய விலைக் கடைகளைத்தான் சார்ந்திருக்கிறார்கள். அவர்களின் வயிற்றிலும் சேர்த்தே அடிக்கிறது விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள்.
இந்த வேளாண் திருத்தச் சட்டங்களுடன், மின்சார திருத்தச் சட்டத்தின் வாயிலாக விவசாயத்திற்குக் கிடைத்து வரும் இலவச மின்சாரத்தையும் ரத்து செய்ய முனைப்பாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. ஆற்றுநீர்ச் சிக்கல்கள் நிறைந்துள்ள தமிழகத்தில், விவசாயம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 1989-91 தி.மு.கழக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவசமாக மும்முனை மின்சாரம் வழங்கினார் தலைவர் கலைஞர். அதன் விளைவாக நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பல பயிர்களின் விளைச்சல் பெருகி விவசாயிகள் நலன் பெற்றனர். அந்த நலனுக்கு வேட்டு வைக்கும் வகையில் மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்துதான் டெல்லியிலே விவசாயிகள் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டிலும், இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பாதுகாக்கப்பட்டு வரும் விவசாயத்தை அப்படியே அபகரித்து, தங்களை வளர்க்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதுதான் பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களின் ஒற்றை நோக்கம். அதன் மூலமாக, மாநில அரசின் உரிமைகளையும் சேர்த்தே பறிக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. மாநில உரிமை எனும் வேட்டி உருவப்படுவதைக்கூட உணராமல்-உணர்ந்தாலும் உறைக்காமல் அடிமைச் சேவகம் செய்யும் ஒரு முதலமைச்சர் வெட்கமின்றி தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார் என்பது வேதனையிலும் வேதனை.
தலைநகர் டெல்லியிலே குவிந்துள்ள விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பை நடத்துவது தங்களுக்காக மட்டுமல்ல, நமக்காக! தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகள் பறிபோகாமல் இருக்க! பட்டினிச் சாவைத் தடுத்திட! நம்மைக் காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம். அவர்களுக்கு அரணாக இருப்போம். நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவளிப்போம். அதனை வெற்றி பெறச் செய்வோம்!”
இவ்வாறு மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.