தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை மிகத் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயல் காரணமாக வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் ‘புரெவி’ என்ற புயல் உருவாகி தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.
வங்கக் கடலில் உருவான ‘புரெவி’ புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைகொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது….
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இருக்கிறது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 5 ஆம் தேதி (இன்று) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மேலும் வலு இழக்கிறது. அதன்பின்னர், மேற்கு-தென்மேற்கு திசையில் நகரத் தொடங்கி, தெற்கு கேரளப் பகுதியை நோக்கிச் செல்லக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், திருவள்ளூர், காஞ்சீபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.