கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது – வானிலை மையம்

புரெவி புயல் நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை கொட்டியது.

அந்தவகையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 225 இடங்களில் மழைப்பொழிவு பதிவாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

புயல் கரையைக் கடந்தாலும், அதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு (6-ந்தேதி வரை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4 ஆம்தேதி (இன்று) தேனி, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 ஆம் தேதி (நாளை) , 6 ஆம் தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில், இன்று (வெள்ளிக்கிழமை) வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

புரெவி புயலைத் தொடர்ந்து அந்தமான் அருகே மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் அதுபற்றி உறுதிப்படுத்தவில்லை.

Leave a Response