அதிமுக பாமக மோதல் முற்றுகிறது

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியர்சங்கம் ஆகியன இன்று போராட்டம் அறிவித்திருந்தது.இதற்காக சென்னை வந்த பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை முழுவதும் புறநகரிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலேயே பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வர் பழனிச்சாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து அன்புமணி ராமதாசு, ஜி.கே.மணி உள்ளிட்டோர் முதல்வர் பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாசு.20 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்துப் பல விசயங்கள் பேசியபின்பு, எங்கள் நோக்கமே அறவழியில் அமைதியாகப் போராடுவதுதான். எங்கள் தொண்டர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று சொல்லியிருந்தார்.

ஆனால், அவருடைய விருப்பம் நிறைவேற்றப்படவில்லை.

தடையை மீறி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாசு, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பா.ம.க.வினர் 850 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதோடு தொடர்வண்டிப்பாதையில் வன்முறை செய்ததாகவும் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி,பாமகவின் போராட்டத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, சாதிவாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளீயிட்டுள்ளார்.

இதனால் கூட்டணிக் கட்சிகளான அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

Leave a Response