நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டி – தொகுதி ஒதுக்கப்பட்டது

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இம்முறையும் தனித்து நின்றே தேர்தல் களத்திச் சந்திப்போம் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய சீமான்,

தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறோம். ஏறக்குறைய சரிபாதி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்குள் (நவ. 26) எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிடுவோம். முன்தயாரிப்புதான் எங்களுக்கு இருக்கிற ஒரே வலிமை. அதனால், முன்கூட்டியே வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடுவோம்

என்று சொல்லியிருந்தார்.

இயக்குநர் மு.களஞ்சியம் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடவிருக்கிறார். அவருக்கு ஆவடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாம். அண்மைக்காலமாக நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் நான் நிச்சயம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் களஞ்சியம் இருக்கிறாராம்.

ஆவடி தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பது அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response