அரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட வரையறை – மாணவர்கள் குழப்பம்

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் முக்கிய கருத்து….

தமிழகத்தில், மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், இந்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இன்னும் இறுதி வரையறை செய்யப்படாமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

பள்ளிகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ள நிலையில், வரும் பொதுத்தேர்வுகளுக்குத் தயாராக வேண்டிய மாணவர்கள், தாங்கள் எந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்பது தெரியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், பாடத்திட்டத்தில் 40% அளவு குறைக்கப்படுவதாகத் தொடர்ந்து தெரிவித்தாலும், என்னென்ன பாடங்கள் குறைக்கப்பட உள்ளன என்பது குறித்த தெளிவான அறிவிப்பு அக்டோபர் மாத இறுதி வரை வராததால், பள்ளி நிர்வாகங்களுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மிகப் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கின்றது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ( CBSE) உள்ளிட்ட வேறு சில பாடத்திட்டங்களின் அடிப்படையில் இயங்கும் பள்ளிகளில், பாடத்திட்டக் குறைப்புக் குறித்துத் தெளிவான இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடு அரசின் பாடத்த்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தக் குழப்ப நிலை தொடர்ந்து நீடிப்பது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகும்.

பள்ளிக்கல்வித்துறை இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இதற்கான அறிவிப்பினை செய்ய வேண்டும். வழக்கம் போல “ குதிரை போன பிறகு லாயத்தைப் பூட்டும்” பழக்கத்தை இந்த விஷயத்திலாவது கைவிட்டு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response