உயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

எனினும், தற்போது வரை ரஜினி கட்சி தொடங்கவில்லை. ஆனால், வரூகிற நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் இல்லையில்லை பிப்ரவரியில் கட்சி தொடங்குகிறார் என்றும் மாற்றி மாற்றி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இதனிடையே, ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,ரஜினிகாந்த் தனக்கு நெருக்கமானவர்களிடம், அரசியல் கட்சி ஆரம்பித்தால் ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்ட என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.எனவே இப்போது கட்சி தொடங்க இயலாது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டுநாட்களாக இத்தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை ரஜினி தரப்பிலிருந்து யாரும் இதை மறுத்துப் பேசவில்லை என்பதால் இது உறுதியான தகவல்தான் என்று நம்பப்படுகிறது.

இந்த தகவல் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால் ரஜினி ரசிகர்கள் பரபரப்புடன் ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டு இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

Leave a Response