கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் தேதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், பிளே ஆஃப் சுற்றுக்கான தேதி, இடங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் மற்றும் தேதிகளை அறிவித்துள்ளது.
பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6 ஆம் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3 ஆவதுமற்றும் 4 ஆவது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.
நவம்பர் 8 ஆம் தேதி அபுதாபியில் நடக்கும் 2 ஆவது தகுதிச்சுற்றுஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.
நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2 ஆவது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.