இரண்டு கூட்டணிகளிலும் இடமில்லை – திகைத்து நிற்கும் தேமுதிக

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எல்லாக் கட்சிகளும் தயாராகிவருகின்றன.

இத்தேர்தலில் ஆளும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போடியிடவிருக்கிறது. இதனால் இதுவரை பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிலை கேள்விக்குரியாகியுள்ளது.

குறிப்பாக விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கடும் சிக்கலில் இருக்கிறதாம்.

அதுகுறித்த விவரம்…..

நடிகர் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைத் தொடங்கினார்.

இக்கட்சி 2006 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதில் விஜயகாந்த் வென்று சட்டமன்றம் சென்றார்.

அடுத்து வந்த 2009 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

இதனால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதன்பின் 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் சேர்ந்து 14 தொகுதிகளில்  போட்டியிட்ட அக்கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை.

2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணி அமைத்து அதன் சார்பில் 104 தொகுதிகளில் போட்டியிட்டது. ஓரிடத்திலும் வெல்லவில்லை. 

அதன்பின் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. எதிலும் வெல்லவில்லை.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி பெறும் வாக்குகள் குறைந்துகொண்டே வந்தது.
விஜயகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் இயல்பாகப் பேச முடியாமல் போனது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகிவிட்டது.

இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சியைச் சேர்த்துக் கொள்ள அதிமுக பாஜக கூட்டணி தயக்கம் காட்டுகிறதாம். அப்படியே சேர்த்துக் கொண்டாலும் ஓரிரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.    

திமுக கூட்டணிக்குள்ளும் போக முடியாது என்கிற நிலை. இதனால் அக்கட்சி திகைத்து நிற்கிறதாம்.

Leave a Response