திமுக கூட்டணியில் கமல் – தொடங்கிய பேச்சுவார்த்தை

2021 இல் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆகியன முதன்மையாக இருக்கின்றன.

இவை தவிர நாம் தமிழர் கட்சி மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் களத்தில் இருக்கின்றன.
இவற்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்தக் கூட்டணியிலும் இணையப்போவதில்லை என்றும் தனித்தே போட்டியிடப் போவதாகவும் சொல்லிவிட்டார். 

ஆனால் கமலோ வாய்ப்பிருந்தால் கூட்டணி அமைப்போம் என்றே பேசிவருகிறார்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் கமலை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
திரைத்துறையில் இருக்கும் திமுகவைச் சேர்ந்தவர்கள் இப்பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருப்பதாகவும் அவர்களோடு கமல் தரப்பும் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கமல் கட்சிக்கு சட்டமன்றத்தில் போட்டியிட ஓரிரு தொகுதிகளை ஒதுக்குவதாகவும் கமலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கொடுப்பதாகவும் திமுக தரப்பு சொல்வதாகத் தகவல்.

இப்பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வெற்றி பெற்றால் ஒரு சுபயோக சுபதினத்தில் அதிமுகவின் அலங்கோல ஆட்சியை அகற்றி இருண்டு கிடக்கும் தமிழகத்துக்கு வெளிச்சம் கொடுக்க சூரியஒளியோடு கலந்தது டார்ச்லைட் ஒளி என்கிற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Leave a Response