மணீஷ்பாண்டே அதிரடி சன்ரைசர்ஸ் அபாரம்

துபாயில் நடைபெற்று வரும் 13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துத் தொடரின் நேற்றைய 40 ஆவது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். ஜேசன் ஹோல்டர் வீசிய 4 ஆவது ஓவரில் ராபின் உத்தப்பா (19 ரன்கள்) ரன் அவுட் ஆனார். அடுத்த விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

ரஷீத் கான் வீசிய 13 ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ்(30 ரன்கள்) பவுல்ட் ஆனார். அடுத்து வந்த ஜோஸ் பட்லர் 9 ரன்களில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ஸ்மித் 19 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததால் அணியின் ரன் வேகம் குறைந்தது.

ரியான் பராக் 2 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ராகுல் திவதியா(2 ரன்கள்) மற்றும் ஜோஃப்ரா ஆர்சர்(16 ரன்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் (4) மற்றும் பேர்ஸ்டோ (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

எனினும், அடுத்து விளையாடிய மணீஷ் பாண்டே நின்று ரன்களை குவிக்கத் தொடங்கினார்.அவரது ஆட்டத்தில் 8 சிக்சர்கள் பறந்தன. 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். ஆட்டம் இறுதி வரை விளையாடிய அவர் 83 (47 பந்துகள்) ரன்கள் எடுத்துள்ளார். விஜய் சங்கர் 52 (51 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்துள்ளார். இருவரும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

18.1 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐதராபாத் அணி 156 ரன்களை எடுத்தது. இதனால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது.

Leave a Response