10 இல் 7 போட்டிகளில் தோல்வி – தோனி சொல்லும் காரணம் என்ன?

ஐபிஎல் 13 மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் நேற்று (அக்டோபர் 19) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் தலைவர் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரன் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர்.

அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த ஜோடியில் டூ பிளஸ்சிஸ் 10(9) ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷேன் வாட்சன் 8(3) ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக சாம் கர்ரன் 22(25) ரன்களும், அம்பத்தி ராயுடு 13(19) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தோனியுடன், ஜடேஜா ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் தோனி 28(28) ரன்களில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் கேதர் ஜாதவ் 4(7) ரன்களும், ஜடேஜா 35(30) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் தேவாட்டியா, ஜோப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி மற்றும் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது. பவர்பிளே முடிவில் (6 ஓவர்கள்) 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை இழந்து ராஜஸ்தான் சற்று திணறியது. எனினும், 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் – கேப்டன் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சர்வதேச அரங்கில் அனுபம் பெற்ற வீரர்களான இருவரும் நேர்த்தியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் வேகத்தை நகர்த்தினர். இதனால், ஆட்டம் சென்னையை விட்டு கைமாறியது.

17.3 ஆவது ஓவரில் 126 ரன்கள் எடுத்து ராஜஸ்தன் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 70 ரன்களும், ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது.

சென்னை அணி தோல்வி அடைந்ததால், நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாயுப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் தலைவர் தோனி கூறியதாவது…..

முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சிற்கே கை கொடுத்தது. கடந்த நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு மட்டும் மாறவே இல்லை. இலட்சக்கணக்கான ரசிகர்கள் போட்டியை பார்ப்பதால், இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.

நாங்கள் இந்தத் தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை தான்,எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களில் நான் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். அவர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றார்.

Leave a Response