குவைத் மன்னர் திடீர் மறைவு – சீமான் இரங்கல்

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் என்றென்றும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படுவார் eன்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..

குவைத் நாட்டின் மன்னராகவும், படைத்தலைவராகவும் விளங்கியவரும், அம்மண்ணின் மக்களுக்கு நல்லாட்சி தந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான போற்றுதற்குரியப் பெருந்தகை அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக குவைத் நாட்டின் வெளிவுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல்வேறு அரசுப் பொறுப்புகளில் இருந்து திறம்படச் செயலாற்றிய அமீர் ஷேக் அவர்கள், பலதரப்பட்ட உள்நாட்டு சிக்கல்களிலும் சிறப்பான வெளியுறவுக்கொள்கையைப் பின்பற்றியதன் மூலம் குவைத் நாட்டினை வளைகுடா நாடுகளில் வலிமையான ஓர் அங்கமாக நிலைநிறுத்தியவராவார்.

தனது சிறப்பான ஆட்சியின் மூலம் குவைத் நாட்டில் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசு உட்படப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் முக்கியமாகத் தமிழர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார்.

மேலும், இயற்கைப்பேரிடர், உள்நாட்டுப்போர் மற்றும் விபத்துகளால் உலக நாடுகள் பாதிப்பிற்குள்ளாகும்போது முதல் நாடாக குவைத்தின் மூலம் உதவிக்கரம் நீட்டியவருமாவார். அகதிகள் மறுவாழ்விற்காக அதிக நன்கொடை வழங்கிய தனிநபராகவும் விளங்கியுள்ளார். இவ்வாறு உலக மக்களின் அமைதிக்காக அரும்பாடுபட்டமையால் ஐ.நா. அவையின் முன்னாள் செயலாளர் பான் கி மூனால் உலகின் மிகச்சிறந்த மனிதநேயப் பண்பாளர் எனப் பாராட்டப்பட்டார். அத்தகையப் பெருந்தகையின் மறைவு குவைத் மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்குமான பேரிழப்பென்றால்,மிகையல்ல!

மாண்புமிகு அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் என்றென்றும் தமிழர்களால் நினைவுகூறப்பட்டு எங்களது மனங்களில் நிறைந்திருப்பார். போற்றுதற்குரிய அப்பெருந்தகைக்கு எமது புகழ் வணக்கம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response