விஜயகாந்த் இரங்கல் செய்தியில் பழ.நெடுமாறன் வெளியிட்ட தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த், நேற்று காலை ஆறு பத்து மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறது. ஏராளமான பொதுமக்களும் அவருக்குக் கண்ணீர் வணக்கம் செய்துவருகின்றனர்.

அவருடைய உடல் இன்று மாலை கோயம்பேட்டிலுள்ள அவருடைய கட்சி அலுவலக வளாகத்தில் முழுஅரசுமரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவருடைய இரங்கல் செய்தியில்….

தே.மு.தி.க. தலைவரும், சிறந்த நடிகருமான விஜயகாந்த் அவர்கள் காலமான செய்தியை அறிந்து மிக வருந்துகிறேன். மதுரை மாநகராட்சி உறுப்பினராக இருந்த அவருடைய தந்தையுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சிறுவயது முதலே திரைப்பட நடிகராகவேண்டும் என்பதைத் தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த விஜயகாந்த் அவர்கள், தன்னுடைய திறமையினாலும், அயராத உழைப்பினாலும் அதில் வெற்றி பெற்று, நடிகர் சங்கத் தலைவராகவும் உயர்ந்தார்.

திரையுலகில் அவர் திரட்டிய செல்வத்தை மக்களுக்கு உதவும் அறத் தொண்டுகளில் செலவிட்டார். திரையுலகிலும், தமிழ்நாட்டு மக்களிடமும் செல்வாக்குப் பெற்றவராகத் திகழ்ந்தார். தே.மு.தி.க.வைத் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவராகச் சட்டமன்றத்தில் பணியாற்றினார்.

அவருடைய மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பேரிழப்பாகும். அவரது பிரிவினால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருக்கும் மூத்த அரசியல்தலைவர்களில் ஒருவரான இவருடைய அறிக்கையின் மூலம் விஜயகாந்த்தின் தந்தையும் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார். அவர் மதுரை மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதும் வெளிப்பட்டிருக்கிறது.

Leave a Response