இலங்கை தொடர்பான மோடியின் கேலிக்கூத்து – பழ.நெடுமாறன் எதிர்ப்பு

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதற்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்…..

இலங்கை இராணுவத்தை நவீன மயப்படுத்த 500 இலட்சம் டாலர் உதவியை இந்திய அரசு வழங்கும் என தலைமையமைச்சர் மோடி – இலங்கை தலைமையமைச்சர் இராசபக்சே நடத்திய பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலிலும் இந்துமாக்கடலிலும் பெருகி வரும் சீன அபாயத்தைத் தடுப்பற்காகவே இந்த உதவி அளிக்கப்படுவதாகக் கூறியிருப்பது கேலிக் கூத்தாகும். இலங்கையில் அம்பன்தொட்டா துறைமுகம் கட்டுவதற்கும் கடற்படைத் தளம் அமைப்பதற்கும் சீனாவுக்கு இடம் கொடுத்ததின் மூலம் இந்தியாவுக்கு மிக அருகில் சீன அபாயத்தைக் கொண்டு வந்தவர் இராசபக்சே ஆவார். மேலும் இந்தியாவில் பயிற்சி பெறும் வெளிநாட்டு வீரர்களில் 50% இடங்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு அளிக்கவும் இந்தியா உடன்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் கிடையாது. இந்தியா இலங்கையின் நட்பு நாடாக இருக்கும் போது யாருக்கு எதிராக இந்த இராணுவ உதவிகளை இந்தியா இலங்கைக்கு அளிக்கிறது? சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இலங்கை தொடர்ந்து நீடித்து வரும்போது இத்தகைய உதவிகளை இந்திய அரசு அளிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response