கடின இலக்கை எட்டியும் பலனில்லை – மும்பை அணிக்கு அதிர்ச்சித் தோல்வி

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.துபாயில் நேற்று இரவு நடந்த 10 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது.

மும்பை அணியில் சவுரப் திவாரிக்கு பதிலாக இஷான் கிஷன் இடம் பெற்றார். பெங்களூரு அணியில் ஜோஷ் பிலிப், உமேஷ் யாதவ், ஸ்டெயின் நீக்கப்பட்டு குர்கீரத் சிங், உதனா, ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். ராகுல் சாஹர் வீசிய ஒரு ஓவரில் ஆரோன் பிஞ்ச் ‘ஹாட்ரிக்’ பவுண்டரிகள் விரட்டி கலக்கினார். ஸ்கோர் 81 ரன்னாக (9 ஓவர்) உயர்ந்த போது ஆரோன் பிஞ்ச் 52 ரன்னில் (35 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அணித்தலைவர் விராட்கோலி 3 ரன்னில் (11 பந்து) ராகுல் சாஹர் பந்து வீச்சில் அணித்தலைவர் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து டிவில்லியர்ஸ் களம் இறங்கினார். நிலைத்து நின்று ஆடிய தேவ்தத் படிக்கல், பேட்டின்சன் வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். டிவில்லியர்சும் அதிரடியாக ஆடினார். அவர் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். 2-வது அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் பேட்டின்சன் பந்து வீச்சில் ஷிவம் துபே 3 சிக்சர்களை விளாசி வியக்க வைத்தார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 55 ரன்களும், ஷிவம் துபே 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 78 ரன்கள் திரட்டியதால் அந்த அணியின் ரன் விகிதம் எகிறியது.

பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. அந்த அணியின் தலைவர் ரோகித் சர்மா 8 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், குயின்டான் டி காக் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னிலும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதைத்தொடர்ந்து பொல்லார்ட், இஷான் கிஷனுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்ததுடன் அணியையும் வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தனர். அபாரமாக ஆடிய இஷான் கிஷன் சதத்தை நெருங்குகையில் (99 ரன், 58 பந்து, 2 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து குருணல் பாண்ட்யா களம் இறங்கினார். கடைசி பந்தில் பொல்லார்ட் பவுண்டரி விளாசினார். 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்ததால் போட்டி டையில் (சமன்) முடிந்தது. பொல்லார்ட் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

போட்டி சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் ஆடிய மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து 8 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Response