ஜெ வின் சட்டமன்றத் தீர்மானம் உண்மையான போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியா?

தமிழ்நாட்டு முதலமைச்சர்  அவர்கள் செப்டம்பர் 16 அன்று சட்டமன்றத்தில் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்துத் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இனப்படுகொலை என்ற சொல்லும் அத்தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது. பன்னாட்டு விசாரணை கோரும் அத்தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரசு உட்பட அனைத்துக் கட்சிகளும் தீர்மானத்தை வரவேற்றுள்ளன.நாமும் தீர்மானத்தை வரவேற்போம்.

ஆனால் இத்தீர்மானம் இந்தியப் பேரரசை ஒரு சிறு அளவேனும் அசைக்குமா?பன்னாட்டு அளவில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா? தீர்மானம் போராடும் புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் நாட்டிலே உள்ள தமிழர்களுக்கும் ஓர் ஆறுதலாக அமையக் கூடும், ஊக்கத்தை அளிக்கக் கூடும். இவற்றிற்கு மேலான ஆக்கமான பயன் எதையும் விளைவிக்காது.

தீர்மானத்தை நிறைவேற்றிய வெற்றிக் களிப்பில் அம்மாவும் அவர் பக்தகோடிகளும் தங்கள் தங்கள் பணியைக் கவனிக்கப் போய்விடுவர். கலைஞர் தீர்மானத்தை வரவேற்பதுடன் தாம் ஈழத்தமிழர்களுக்காகச் செய்த ஈகங்களைப் பட்டியலிட்டுத் தம் தம்பிகளை உற்சாகப்படுத்தி விட்டு ஓய்வெடுக்கப் போய்விடுவார்.

இவ்விரண்டு கட்சிகளுக்குமே தீர்மானங்கள்தாம் உயிர்மூச்சுகள். ஆட்சியில் இருக்கும் பொழுது சட்டமன்றத்தில் தீர்மானங்கள்; ஆட்சியில் இல்லாத போது மாநாடுகளில் தீர்மானங்கள். எந்தக் காரணம் கொண்டும் போராட்டங்களைக் கையில் எடுப்பதில்லை என்பதில் அவை உறுதியாக உள்ளன.

ஆட்சியில் இருக்கும் பொழுது போராட்டங்களை ஒடுக்குவதிலும் திசைதிருப்புவதிலும் அவை கெட்டிக்காரத்தனமாகச் செயல்படும். இன்றைய இத்தீர்மானம் கூடப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் உத்தியாக இருக்கக்கூடும். தமிழ்நாட்டில் மய்யஅரசுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கவல்ல போராட்டங்களே சிறிதேனும் விளைவைத் தரும்.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது அத்தகைய போராட்டங்கள் நடைபெறாமல் அன்றைய முதல்வர் பார்த்துக் கொண்டார். இன்றைய முதல்வரும் அதையே அவரினும் திறம்படச் செய்வார். தமிழ்த் தேச ஆற்றல்களும் ஈழத்தமிழர் விடுதலையில் அக்கறையுள்ள இடதுசாரிகளும் மனித உரிமைப் போராளிகளும் ஒன்றிணைந்து இந்தியப் பேர்ரசை அசைக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் வலிமையைப் பெறும் வரை இத்தகைய தீர்மானங்களை வரவேற்பதைத் தவிர வேறு வழியில்லை.

 – கலைவேலு

Leave a Response